--- --:--:-- --

“நமஸ்தே டிரம்ப்!!” அமெரிக்க அதிபரின் ’34 மணி நேர’ பயணம்..! “பெரிய அண்ணாச்சி” வருகையால் இந்தியாவுக்கு என்ன நன்மை?

16

இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு விசிட் செய்யும் உலகின் பெரிய அண்ணன் என அழைக்கப்படும் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவருடைய மனைவியை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தின் அகமதாபாத் நகரம் பல கோடி ரூபாய்களை கொட்டி புதுப்பொழிவு பெற்றுள்ளது. வர்த்தக ஒப்பந்தம் கிடையாது; சிஏஏ உள்ளிட்ட இந்திய விவகாரங்களில் டிரம்ப் தலையிடுவது போன்றவற்றால் அவரின் இந்தப் பயணம் அனைவராலும் பெரிதும் உற்று நோக்கப்படுகிறது.

 

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக நாளை (24-ந் தேதி) 2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். டிரம்ப்புடன் அவரது மனைவி மெலே னோ மற்றும் மகள், உயர் அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என பெரும் படையினர் வருகை தருகின்றனர். அமெரிக்க அதிபருக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக ஏர்போர்ஸ் 1 விமானத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு குஜராத் தலைநகர் அகமதாபாத் வந்தடைகிறார் டிரம்ப் . சர்தார் படேல் விமான நிலையத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பளிக்கின்றனர்.

 

பின்னர் விமான நிலையத்தில் இருந்து 22 கி.மீ. தூரத்துக்கு சாலை மார்க்கமாக டிரம்ப் பயணிக்கிறார். அப்போது வழி நெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு டிரம்ப்புக்கு உற்சாகமாக கையசைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 22 கி.மீ. சாலையின் இருபுறமும் மிகப் பிரமாண்டமான புதிய சுவர்கள் எழுப்பப்பட்டு வண்ண, வண்ண ஓவியங்களால் மிளிர்கின்றன. இந்த சுவர் எழுப்ப மட்டுமே 100 கோடி ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏழ்மை நிலையையும், குடிசைகளில் மக்கள் வசிப்பதை டிரம்ப் கண்ணில் பட்டு விடக் கூடாது என்பதற்காக இத்தனை கோடி செலவில் இந்த மெகா சுவர் எழுப்பப்பட்டதாகக் கூட சர்ச்சை எழுந்தது.

 

இப்படி சாலையில் ஊர்வலமாகச் செல்லும் வழியில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்துக்கு விசிட் செய்கிறார் டிரம்ப் . ஆஸ்ரமத்தை சுற்றிப் பார்க்கும் டிரம்ப், மகாத்மா காந்தி என்ற மாபெரும் மனிதரின் எளிமையான வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட அவரது நினைவுகள் உள்ளிட்ட காட்சிகளை பார்வையிடுகிறார். அப்போது டிரம்ப்புக்கு கை ராட்டையையும், காந்தியின் புத்தகங்கள் சிலவற்றையும் நினைவுப்பரிசாக பிரதமர் மோடி வழங்குகிறார்.

 

பின்னர், அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய, பிரமாண்ட மான விளையாட்டு மைதானத்தை சென்றடைகிறார் டிரம்ப் ஸ்டேடியத்தில் டிரம்ப்பை இந்திய மக்கள் வரவேற்று கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சிக்கு “ஹவ்டி மோடி” என பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதே போல் டிரம்ப்பை வரவேற்கும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு “நமஸ்தே டிரம்ப்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மக்கள் கூடும் இந்த நிகழ்ச்சியில், டிரம்ப் கலந்துரையாடல் நிகழ்வும் தொடர்ந்து இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளும் களைகட்ட உள்ளன.

இதன்பின், பிரதமர் மோடி அளிக்கும் தடபுடல் மதிய விருந்தில் டிரம்ப் பங்கேற்கிறார். தொடர்ந்து 3.30 மணிக்கு ஆக்ராவுக்கு மனைவி சகிதம் புறப்படுகிறார் டிரம்ப் .காதல் மனைவி நினைவாக ஷாஜகான் மன்னனால் கட்டப்பட்ட வெண்பளிங்கு கற்களாலான காதல் சின்னமான தாஜ்மகாலை டிரம்ப் தம்பதியினர் ஆர்வமாக சுற்றிப் பார்க்கின்றனர். இந்த உலக அதிசயத்தை சுற்றிப் பார்த்து விதவிதமான படங்களும் எடுக்க ஆர்வம் தெரிவித்துள்ளார் டிரம்ப் .பின்னர் 24-ந் தேதி இரவு தலைநகர் டெல்லி சென்றடைகிறார் டிரம்ப் .

 

மறுநாள் (25-ந் தேதி) முழுவதும் டெல்லியில் டிரம்ப்புக்கு டைட் ஷெட்யூல் தான். காலை 10 மணிக்கு ராஷ்ட்ரபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அவருடைய மனைவி சவீதாவும், டிரம்ப் தம்பதியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து உபசரிக்கின்றனர். பின்னர் 10.45 மணிக்கு ராஜ் காட்டில் உள்ள தேசப்பிதா காந்தி சமாதிக்கு சென்று டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து 11.30 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி – டிரம்ப் சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் நடத்துகின்றனர். மற்றொரு புறம் இரு நாட்டு உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்த நேரத்தில் டிரம்ப் மனைவு மெலோனா, டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு விசிட் செய்து நமது நாட்டின் கல்வி முறை பற்றி தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பிரதமர் மோடி வழங்கும் மதிய விருந்துக்குப் பின் பிற்பகல் 3 மணிக்கு அமெரிக்க தூதரகத்தில் இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்திக்கிறார் டிரம்ப் . ரவுன்ட் டேபிள் மீட்டிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த சந்திப்பு, இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் அமெரிக்காவின் உதவிகள், ஆலோசனைகள், ஒத்துழைப்பு குறித்து டிரம்ப் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது.

 

தொடர்ந்து இரவு 8.45 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப்புக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரவு விருந்தளித்து உபசரிக்கிறார். பின்னர் இரவு 10 மணிக்கு இந்திய பயணத்தை நிறைவு செய்து விட்டு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் அமெரிக்காவுக்கு பறக்கிறார் டிரம்ப் .

 

இதற்கு முன்னரெல்லாம் கடந்த 20 வருடங்களில் மட்டும் அமெரிக்க அதிபர்களாக இருந்த கிளிண்டன் (2000), ஜார்ஜ் டபிள்யூ புஷ் (2006), ஒபாமா (2010, 2016) ஆகியோர் இந்தியா வந்த போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல்வேறு சலுகைகளையும் அறிவித்துவிட்டு சென்றனர். இதேபோல் டிரம்ப்பின் இந்த பயணத்தின் முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த பயணத்தில் இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என வெள்ளை மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை அதிக இறக்குமதி விதிக்கும் நாடு என்றும், வரிகளின் ராஜா இந்தியா என்றும் டிரம்ப் கூறியுள்ளதும் சர்ச்சையாகி உள்ளது.அத்துடன் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, குடியுரிமை சட்டம், என் பிஆர், என்சிஆர் குறித்தெல்லாம் டிரம்ப் பேச உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளும் இந்தியாவுக்கு ஏமாற்றத்தையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவுக்கு நன்மை பயக்கும் முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற நினைப்பில் தடபுடல் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் “நோ டிரேட் டீல்” என அல்வா கொடுத்து விட்டார். இப்போது, உலகின் பெரிய அண்ணன் என்ற நினைப்பில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான சிஏஏ, என்பிஆர், என்சிஆர் குறித்தெல்லாம் டிரம்ப் பேசப்போவதாக வெளியான அறிவிப்பால் டிரம்ப்பின் இந்தியப் பயணம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது அத்துடன் டிரம்ப்பின் இந்தப் பயணத்தால் நமது நாட்டுக்கு என்ன நன்மை? ஏன் இந்த தடபுடல் வரவேற்புகள் என்ற விமர்சனங்களும் எழுந்து பரபரப்பாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon