--- --:--:-- --

“அவர் வரவில்லை; இறந்த தகவல்தான் வந்தது” – ‘இந்தியன்2’ விபத்து சோகம்

2

இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த உணவு சப்ளையர் சந்திரன் 40 ஆண்டுகளாக திரைத் துறையில் பணியாற்றியவர். ப்ளஸ் டூ படிக்கும் தமது மகளின் பள்ளியில் நடைபெற்ற வழியனுப்பு விழாவுக்கு வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை.

 

திரைத்துறை எனும் மாய உலகில், புகழ் வெளிச்சம் படாத இடத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவரின் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கும் காட்சிதான் இது. தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பால் மட்டுமே ஒரு திரைப்படம் உருவாகி விடுவதில்லை. விழித்திரையின் பின்னே நூற்றுக்கணக்கான இரும்புக் கரங்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் உள்ளது.

 

எனினும், நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கிடைப்பது போன்ற புகழோ, ஊதியமோ அவர்களுக்கு கிட்டுவதில்லை, அப்படிப்பட்ட ஒருவர்தான் சந்திரன், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமத்தை சேர்ந்த சந்திரன், கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் உணவு சப்ளையர் ஆக பணியாற்றி வந்தார்.

அதுமட்டுமின்றி எட்டு ஆண்டுகள் தென்னிந்திய திரைப்பட சினி மற்றும் டிவி தயாரிப்பு உதவி நிர்வாக ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். அவருக்கு ராதா என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு எழுதப்போகும் அவரின் பள்ளி வகுப்புகள் புதன்கிழமை நிறைவடைந்தன.

 

அதற்காக பள்ளியில் வழியனுப்பு விழா நடைபெற்றது. நிச்சயம் விழாவில் கலந்து கொள்வேன் எனக் கூறிவிட்டு இந்தியன்2 படப்பிடிப்பிற்கு புறப்பட்டு சென்றுள்ளார் சந்திரன். ஆனால் விழா முடிந்த பின்பும் கூட அவர் வரவில்லை. இரவு வீட்டிற்கு வர தாமதம் ஆனாலும் அல்லது வர முடியாவிட்டாலும் மனைவி ராதாவுடன் தொலைபேசியில் பேசுவது சந்திரனின் வழக்கம்.

 

அதற்கு மாறாக புதன்கிழமை இரவு சந்திரன் இறந்துவிட்டார் என்ற தகவல் தான் ராதாவிற்கு வந்துள்ளது. பல கனவுகள் திரைப்படங்களாக மாற உழைத்த சந்திரன் மகளை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்ற தனது கனவை நனைவாக்காமல் மறைந்துவிட்டார். திருமணமாகி 20 ஆண்டுகளாகியும் ஒரு முறை கூட படப்பிடிப்புக்கு ராதாவை சந்திரன் அழைத்துச் சென்றது இல்லையாம்.

 

படப்பிடிப்புக்கு எந்த இடையூறும் நேரக்கூடாது என அவர் எண்ணியதே அதற்கு காரணம் என்கிறார் ராதா. தான் மிகவும் நேசித்த படப்பிடிப்பு தளத்திலேயே உயிரை விட்டுள்ளார் சந்திரன்.

Leave a Reply

Right Menu Icon