டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்பு என பழி சுமத்திய தயாநிதி மாறன் மீது வழக்கு..! அமைச்சர் ஜெயக்குமாருக்கு அனுமதி!!
டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு என திமுக எம்.பி., தயாநிதி மாறன் குற்றம் சாட்டியிருந்தார். இதனை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக கூறியிருந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்ற விவகாரம் தமிழகத்தையே கலங்கடித்துள்ளது. இது தொடர்பான விசாரணையில்,பல தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெற்றது வரிசையாக அம்பலமாகி வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள், முறைகேடாக தேர்வு எழுதியவர்கள் என பலரும் சிக்கி வருகின்றனர். இதுவரையில் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணையும் தொடர்கிறது .
இந்த டிஎன்பிஎஸ்சி விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. தயாநிதி மாறன், இந்தத் துறையின் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலை விட மிகப் பெரிய ஊழல் டிஎன்பிஎஸ்சி ஊழல். எனவும், இதில் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டியிருந்த தயாநிதி மாறன், அமைச்சர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் ஆதாயத்துக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் எவ்வளவு பெரிய பொறுப்பில் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.மேலும் அரசியல் ஆதாயத்துக்காக தம் மீது வீண்பழி சுமத்தும் தயாநிதிமாறன் மீது வழக்கு தொடர்வேன். அவர் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். என்றும் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அவதூறு பரப்பியதாக தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஜெயக்குமாருக்காக தமிழக அரசு வழக்கறிஞர் விரைவில் உயர் நீதிமன்றத்தில் அவதுறு வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது.





