--- --:--:-- --

கெஜ்ரிவால் 16-ந்தேதி பதவியேற்கிறார்..! ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு!!

w

டெல்லி முதல்வராக 3-வது முறையாக அரியணை ஏறும் கெஜ்ரிவால், பதவியேற்பு விழாவை படு சிம்பிளாக நடத்த திட்டமிட்டார். ஆனால் கட்சித் தொண்டர்கள், டெல்லி மக்களின் விருப்பத்தை ஏற்று, ராம்லீலா மைதானத்தில், மக்கள் வெள்ளத்தின் நடுவே பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. 3-வது முறையாக முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவால் அரியாசனம் ஏறுகிறார்.நேற்று முடிவுகள் வெளியாகி, 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ள கெஜ்ரிவாறுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 

இந்நிலையில் கெஜ்ரிவால் முதல்வர் பதவியேற்பு தொடர்பாக, டெல்லியில் இன்று அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின. ஆம் ஆத்மி சார்பில் வெற்றி பெற்ற 62 எம்எல்ஏக்களும், கெஜ்ரிவால் வீட்டில் கூடி னர். தங்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக கெஜ்ரிவாலை ஏகமனதாக தேர்வு செய்தனர். தொடர்ந்து, டெல்லி துணை நிலை ஆளுநர் பைஜாலை சந்தித்த கெஜ்ரிவால், ஆட்சியமைக்க உரிமை கோரினார். அத்துடன் பதவியேற்பு விழா குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், பதவியேற்பு விழாவை வரும் 14-ந் தேதி காதலர் தினத்தில் மிக எளிமையாக நடத்த கெஜ்ரிவால் முதலில் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் கட்சித் தொண்டர்களும், டெல்லி வாசிகள் பலரும் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பதவியேற்பு விழாவை விடுமுறை நாளான ஞாயிறன்று (16-ம் தேதி) ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் நடுவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon