--- --:--:-- --

தமிழ் புத்தாண்டில் ரஜினி புதுக்கட்சி? கூட்டணிக்கும் பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள்..! தமிழருவி மணியன் வாய்ஸ்!!

11

வரும் சித்திரை முதல் நாளில் ரஜினி புதுக் கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்டில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் எனவும் ரஜினியின் அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் கூட்டணி வைக்க பாமக உள்ளிட்ட பல கட்சிகள் வரிசை கட்டி காத்துக் கிடப்பதாகவும் தமிழருவி மணியன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

 

கடந்த கால் நூற்றாண்டாக அரசியலுக்கு வருவது போல திடீரென பாவ்லா காட்டுவதும், பின்னர் சினிமாவே கதி என சைலண்ட் மோடுக்கு செல்வதையும் வாடிக்கையாக கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .அவரது ரசிகர்களும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் களத்தில் குதிக்க தயார் நிலையில் காத்துக் கிடக்க, ரஜினியும் தாத்தாவாகி விட்டார்; அவரது ரசிகர்கள் பலரும் தாத்தாவானது தான் மிச்சம்.

 

கடைசியில், 2 வருடங்களுக்கு முன் தான், “நான் அரசியலுக்கு வரப்போவது நிச்சயம் ; 2021 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு” என திட்டவட்டமாக தெரிவித்து ரசிகர்களை உசுப்பேற்றி விட்டார். ரசிகர்களும் உற்சாகமானார்கள். ஆனால் 2 ஆண்டுகளாகியும் ரஜினி கட்சி தொடங்கிய பாடில்லை. உண்மையிலேயே சொன்னபடி கட்சி தொடங்குவாரா.? இல்லை இப்போதும் அல்வா தானா? என விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்திலையில் தான், நான் அரசியலுக்கு தயாராகிவிட்டேன் என்பது போல, உண்மையான அரசியல்வாதி போல, 2020-ம் ஆண்டு பிறந்தது முதலே வேஷம் கட்டத் தொடங்கி விட்டார் ரஜினி. பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பகிரங்க ஆதரவு, மாணவர்களை அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக தூண்டி விடுகின்றன; மாணவர்கள் தீர யோசிக்க வேண்டும் என்றெல்லாம் அரசியல்வாதி போல பேசி ரஜினி பரபரப்பை கிளப்பினார். இதன் மூலம் ரஜினி கட்சி தொடங்க ஆயத்தமாகிவிட்டார்; அவரை பின்னாலிருந்து யாரோ இயக்குகிறார்கள். அதன்படி தான் ரஜினி வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின.

ரஜினிக்கு பின்னால் இருந்து ஆலோசனை கொடுப்பதும், இயக்குவதும் வேறு யாருமல்ல. இரண்டே பேர் தான். சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி என காங்கிரசில் பல காலம் மேடைகளில் முழங்கியும், பெரிய பதவிகளுக்கு வர முடியாத தமிழருவி மணியன் அதில் ஒருவர். மற்றொருவர், திரைமறைவில் இருந்து கொண்டே தமிழகம் மட்டுமின்றி டெல்லி பாஜக மேலிடத்திலும் செல்வாக்காக காய் நகர்த்தும் சோவின் சிஷ்யரான ஆடிட்டர் குருமூர்த்தி தான். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக அரசை திரைமறைவில் இருந்து கொண்டு ஆட்டிப் படைப்பதே குருமூர்த்தி தான் என்ற அளவுக்கு அவருக்கு பாஜக மேலிடத் தலைவர்களிடம் செல்வாக்கு அதிகம். இவர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் படி தான் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதும், பின்னர் மன்னிப்பு கேட்க மாட்டேன் என அவர் ஓங்கிய குரலில் முழங்கியதும் என பார்க்க்பபடுகிறது.

 

இப்படி ஆடிட்டர் குருமூர்த்தி திரைமறைவில் ரஜினியை இயக்குகிறார் என்றால், ரஜினியின் குரலாக பொது வெளியில் வாய்ஸ் கொடுப்பவர் தமிழருவி மணியன். இவர்தான் இன்று வெளியாகியுள்ள ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பட்டியல் போட்டு தெரிவித்துள்ளார்.

 

தமிழருவி மணியன் தனது பேட்டியில், ரஜினி வரும் சித்திரை முதல் நாளில் புதுக் கட்சி தொடங்குகிறார். ஆகஸ்ட் மாதம் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம். செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் தொடங்குகிறார். ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் வரிசை கட்டி காத்துக் கிடக்கின்றன. இதில் பாமக ரஜினியுடன் கூட்டணி சேரும். தினகரனின் அமமுகவை கூட்டணியில் சேர்த்தால் கெட்ட பெயர் வந்து விடும் என்பதால் சேர்க்க மாட்டோம். 2014-ல் நான் முன்னின்று அமைத்த கூட்டணி (தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக) 19 சதவீத வாக்குகளைப் பெற்று சாதித்தது. இப்போது ரஜினி தொடங்கப் போகும் கட்சி அமைக்கும் கூட்டணி வெல்வது நிச்சயம் என்ற ரீதியில் ரஜினி கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் போல் தமிழருவி மணியன் விலாவாரியாக தெரிவித்துள்ளார்.

 

ரஜினியின் குரலாக ஒலிப்பவர்தான் தமிழருவி மணியன். இதனால் ரஜினி கட்சியின் பெயர் என்னவாக இருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா? வேறு யார்? யாரெல்லாம் கூட்டணி வைப்பார்கள் என்ற யூகங்கள் இப்போதே கிளம்ப ஆரம்பித்துள்ளன. அது மட்டுமா? அதிமுகவில் . உள்ள முக்கியப் புள்ளிகள் பலரும், ஆடிட்டர் குருமூர்த்தி ஏற்பாட்டில் ரஜினி கட்சியில் ஐக்கியமாக தயாராக உள்ளனராம். அது யார்? யாராக இருக்கும் என்ற விவாதங்களும் அதிமுகவில் இப்போது சூடாகி கிடக்கிறது.

 

எனவே, தமிழருவி மணியன் கூறியபடி,ரஜினி கட்சி தொடங்குவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர் பார்க்கலாம். அப்புறமென்ன ? தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது தான்.

Leave a Reply

Right Menu Icon