--- --:--:-- --

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும், செங்கோட்டையையும் விற்றுவிடுவார்கள்

1

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் எட்டாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி துவாரகா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

 

எண்பதாயிரம் பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில் நடைபெற்று வரும் போராட்டங்களை மக்கள் நன்கு கவனித்து வருகின்றனர் என்றும், போராட்டம் நடத்த மக்கள் தூண்டப்படுதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

 

மேலும் தனது இறுதி மூச்சுவரை டெல்லி மக்களுக்காக பணியாற்றுவேன் என்றும் பிரதமர் கூறினார். இதேபோல் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி பங்கேற்ற பரப்புரை பொதுக்கூட்டம் சங்கம் விஹர் பகுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து பிரதமர் மோடி ஏன் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேக் இன் இந்தியா தான் தங்கள் தாரக மந்திரம் என கூறி வரும் பாஜக அரசு, நாட்டில் ஒரு தொழிற்சாலையை கூட தொடங்கவில்லை என குற்றம்சாட்டினார். எல்லாவற்றையும் தனியாரிடம் விற்கும் மத்திய அரசு ஒருநாள் தாஜ்மகாலையும் விற்பனை செய்யும் என்று ராகுல்காந்தி சாடினார்.

 

இதேபோல் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ,உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon