--- --:--:-- --

திக்..திக்..சூப்பர் ஓவர்..! சிக்சர்களாக விளாசி ரோகித்து கெத்து..! நியூசி.யை வீழ்த்திய இந்தியா..! தொடரும் வசமானது!!!

sf

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வெற்றி பெற்று, நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்தப் போட்டி முதலில் சமனில் (டை) முடிய, சூப்பர் ஓவருக்கு சென்றது. 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட, சிக்சர் மன்னன் ரோகித் சர்மா 2 சிக்சர்களை பறக்க விட்டு கெத்து காட்டி வெற்றியை வசமாக்கினார்.

 

நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இன்று ஹாமில்டனில் நடைபெற்ற 3-வது போட்டியிலும் வென்றால் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருந்தது இந்தியா.

 

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இம்முறை பந்து வீச்சை தேர்வு செய்தார். ரோகித்தும், ராகுலும் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டினர். கடந்த 2 போட்டிகளில் சாதிக்கத் தவறிய ரோகித் இம்முறை அசத்தினார். ராகுல் (27) ரன்களுடன் நடையைக் கட்ட, ரோகித் அரைசதம் கடந்து 65 ரன்கள் எடுத்தார். கோஹ்லி தன் பங்குக்கு 38 ரன்கள் விளாசினார்.து பே(3), ஸ்ரேயாஸ்(17), மணீஷ் (14), ஜடேஜா (10) என ரன்கள் சேர்க்க 20 ஓவர் முடிவில் இந்திய அணி 179 ரன்கள் எடுத்தது.

 

அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து மீள முடியும் என்ற இக்கட்டான சூழலில் நியூசிலாந்து வீரர்கள் அதிரடி காட்டினர். குப்டில் (31) மன்ரோ (14) ரன்களில் அவுட்டானாலும், கேப்டன் வில்லியம்சன் ஒரு பக்கம் விளாசலில் ஈடுபட்டார். சான்ட்னர் (9) கிராண்ட் ஹோம் (5) ஆகியோரும் சொதப்பினாலும், கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்டது. கேப்டன் வில்லியம்சனும், டெய்லரும் களத்தில் இருந்ததால் நியூசி., அணியின் வெற்றி உறுதி என்றே எதிர்பார்க்கப்பட்டது.

 

அதற்கேற்ப, கடைசி ஓவரை முகமது ஷமி வீச, முதல் பந்தில் டெய்லர் அபார சிக்சர் விளாசினார். அடுத்த பந்தில் டெய்லர் ஒரு ரன் எடுக்க 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனாலும் நம்பிக்கை தளராத ஷமி துல்லியமாக வீசிய 3-வது பந்தில் வில்லியம்சன் அவுட்டாகி 95 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பையும் இழந்து வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
4-வது பந்தில் ரன் இல்லை. 5-வது பந்தையும் அடிக்க விடாமல் போட பை ரன்னாக ஒரு ரன் கிடைக்க ரன் சமநிலையானது. கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஸ்டேடியமே திக் திக் மன நிலையில் அமைதி காத்தது. ஆனால் ஷமி வீசிய யார்க்கர் பந்தில் டெய்லர் கிளீன் போல்டாக போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரிலும் வில்லியம்சன் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என 11 ரன்னும், குப்டில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்களும், ஒரு உதிரி, ரன்னும் கிடைக்க 17 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து .18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரோகித்தும், லோகேஷும் களமிறங்க மீண்டும் மைதானம் திக்.. திக்.. திகிலில் உறைந்தது.முதல் பந்தில் 2 ரன்களுக்கு ரோகித் ஓடும் போது ரன் அவுட்டிலிருந்து கண்டம் தப்பினார்.

 

அடுத்த பந்தில் ரோகித் ரன் மட்டுமே தட்டிவிட 4 பந்தில் 15 ரன் தேவை என டென்ஷன் எகிறியது. 3-வது பந்தில் லோகேஷ் அபாரமாக பவுண்டரி அடிக்க, அடுத்த 3 பந்தில் 11 ரன் தேவைப்பட 3 வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார் லோகேஷ். இப்போது இந்தியத் தரப்புக்கோ உச்சகட்ட டென்ஷன். 2 பந்தில் 10 ரன் தேவை. சாத்தியம்தானா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பந்தை எதிர்கொள்வது சிக்சர் மன்னன் ரோகித் என்பதால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது.

 

அந்த நம்பிக்கை வீண் போகாமல், இரு பந்துகளிலும் சிக்சர்களாக பறக்க விட்டு கெத்து காட்டி இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார் ரோகித்து. வெற்றி சாத்தியமில்லை என்ற நிலையில் சாத்தியமாக்கி காட்டிய ரோகித் சர்மா ஹீரோவாகி, இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி தொடரை தொடர்ந்து 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-0 என கைப்பற்றியது இந்தியா. அது மட்டுமின்றி நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை இந்தியா கைப்பற்றுவது இதுதான் முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon