சிஏஏ-வுக்கு எதிராக டெல்லியில் நள்ளிரவை தாண்டியும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மும்பை மற்றும் டெல்லியில் நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஆசாத் சந்தை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தினர். நள்ளிரவையும் தாண்டி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதைப்போல நிஜாமுதீன் பகுதியில் நள்ளிரவில் போராட்டம் நடைபெற்றது. மத்திய மும்பையில் மதன்புரா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர். கொல்கத்தாவில் இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே ஹைதராபாத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகரராவ் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற நிலையில், சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஸ்காட்லாந்தின் போராட்டம் நடைபெற்றது. எடின்பர்க்கில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.






