இத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது அம்பலம்
இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்ஐ வில்சன் கடந்த 8ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஷமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறை கண்டறிந்தது. இவர்களில் அப்துல் ஷமீம் 2014-ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். அவருக்கும் தவ்ஃபிக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தது தமிழக காவல்துறை.
இருவரையும் தனிப்படை காவலர்கள் வலைவீசி தேடிய நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அப்துல் சமீம், தௌஃபிக் சிக்கினர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது தனிப்படை. வில்சனை கொலை செய்து விட்டு இருவரும் பேருந்து மூலம் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். அங்கிருந்து கொச்சி சென்று அவர்களை நாளிதழை வாங்கி வில்சன் கொலை குறித்த செய்தியை படித்துள்ளனர்.

அதன் பின்பு கொச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் துப்பாக்கியை வீசினோம் என இருவரும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் பேரில் இருவரையும் அழைத்துக்கொண்டு கொச்சி சென்ற காவல்துறையினர் கழிவுநீர் கால்வாயில் இருந்து துப்பாக்கியை கண்டெடுத்தனர். அதில் ஐந்து குண்டுகள் இருந்ததாக தெரிகிறது.
அந்த துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்றும் ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






