பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம் – திலிப் கோஷ் சர்ச்சை பேச்சு
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை சுட்டு வீழ்த்துவோம் என்று மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா தலைவர் திலீப் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திலீப் கோஷ் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறினார்.
பலர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக தெரிவித்தார். அவ்வாறு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஏனெனில் அவர்கள் அனைவரும் மம்தாவின் வாக்காளர்கள் என்று விமர்சனம் செய்தார்.
ஆனால் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம்,அசாம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சுட்டு தள்ளப்பட்டார்கள் எனவும் கடுமையாகப் பேசியுள்ளார். பொது சொத்துக்கள் என்ன உங்களது பண்ணை நிலமா என சாடிய கோஷ் நாங்கள் போராட்டக்காரர்களை லத்தியால் அடிப்போம், சுடுவோம் மற்றும் சிறையில் அடைப்போம் என்றும் கூறினார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் மகாத்மா காந்தியின் ஒற்றுமை கோட்பாடுகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தெரிவித்திருக்கிறார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை அவர் நேற்று இரவு சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.
அவர்கள் மத்தியில் பேசிய சசிதரூர் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் நாட்டின் மீது கரை படிந்துவிட்டதாக தெரிவித்தார். துணைவேந்தருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் விடுதிக்குள் நுழைந்து மாணவிகளை காவலர்கள் தாக்கியது வெட்கக்கேடானது என்று சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குடியுரிமை சட்டத்தில் மதம் என்ற சொல்லே இடம் பெற்றதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு சமூகத்தினரை ஓரங்கட்டும் இச்சட்டம் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று கூறிய சசிதரூர், ஒரு சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் சசிதரூர் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.






