சட்டை பாக்கெட்டில் பாய்ந்த குண்டு! நூலிழையில் தப்பிய காவலர்!
உத்திரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உத்திரபிரதேசத்தின் பரிதாபாத் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தது.
அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தியதோடு மக்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த காவலர்கள் மீது கற்களை வீசினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
அந்த பகுதியில் பரிதாபாத் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் விஜேந்திரகுமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். யாரும் எதிர்பாராத வேளையில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அதில் இருந்து வந்த தோட்டா விஜேந்திரகுமாரின் மீது பாய்ந்தது. ஆனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை.
குண்டு துளைக்காத உடை அணிந்து இருந்ததால் அது தான் தன்னை காப்பாற்றியதாக நினைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். இந்த சம்பவம் நடந்து சில மணி நேரம் ஆன நிலையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக தனது பர்சை எடுத்த விஜேந்திரகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
காரணம் அவரின் பரிசை கிழித்துக்கொண்டு ஒரு குண்டு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. விஜேந்திரன் மீது பாய்ந்த தோட்டா அவர் உடுத்தியிருந்த குண்டுதுளைக்காத உடுப்பில் ஊடுருவியுள்ளது. பின்னர் அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் புகுந்து அதன் முன் பக்கத்தில் இருந்த பர்சை கிழித்துள்ளது.
பாக்கெட்டில் பர்ஸ் வைத்திருந்ததால் மயிரிழையில் விஜேந்திரகுமார் உயிர் தப்பினார். பரிசில் நான்கு ஏடிஎம் கார்டுகளும், கடவுள் புகைப்படமும் இருந்ததாகவும், தான் உயிர் தப்பியது தனக்கு மறுஜென்மம் என நெகிழ்ச்சியுடன் விஜேந்திரகுமார் தெரிவித்தார்.






