உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே 2 சொகுசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று பயங்கர மோதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே இரு சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பேருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் சொகுசுப் பேருந்து திடீரென திரும்ப முற்பட்டதாக கூறப்படுகிறது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 28 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிலர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.






