--- --:--:-- --

ஜாமீனில் வெளிவந்து மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட முயன்ற இடைத்தரகர்கள்

3

குழந்தை விற்பனை குற்றச்சாட்டில் நாமக்கல்லில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பெண் இடைத்தரகர்கள் இரண்டுபேர் கோவையில் மீண்டும் குழந்தையை விற்க முயற்சி செய்துள்ளனர். கூடுதல் பணம் கேட்டும் சாலையில் தகராறு செய்தபோது காவல்துறையினரிடம் சிக்கினர்.

 

நாமக்கல்லில் குழந்தை விற்பனை செய்தது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த ஹசீனா, கல்யாணி உள்ளிட்ட 11 பேர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த பெண் இடைத்தரகர்களான ஹசீனா மற்றும் கல்யாணி ஆகிய இருவரும் தற்போது மீண்டும் கோவையில் ஆண் குழந்தையை விற்க முயற்சித்துள்ளனர்.

 

கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜாகிர் என்பவர் உறவினர்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக ஹசீனா மற்றும் கல்யாணியை நாடியுள்ளார். இருவரும் இரண்டு லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு குழந்தையை தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

 

மதுரையை சேர்ந்த தம்பதி அவர்களது ஆண் குழந்தையை விற்பதற்காக கோவை பாப்பம்பட்டி வந்தபோது இடைத்தரகர்கள் இருவரும் கூடுதல் பணம் கேட்டு ஆட்டோ ஓட்டுநரிடம் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

நிகழ்வு இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் குழந்தையை விற்க முயற்சி தம்பதி பெண் இடைத்தரகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஜாஹிர் ஆகிய 5 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon