டி20 தொடரை கைப்பற்றப் போவது யார்? இந்தியா – மே.இ.தீவுகள் இன்று பலப்பரீட்சை!!
இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் இடையேயான டி20 தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய கடைசிப் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்ற பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்தியா வந்துள்ள மே.இ.தீவுகள் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பதிலடியாக,அடுத்து திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவை பழி தீர்த்தது இந்தியா.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பையில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரில் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றும் . இதனால் இன்றைய போட்டியில் தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த இரு போட்டிகளில், இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன்களைக் குவிக்காமல் ஏமாற்றி வருகிறார். இன்று மும்பையில் தனது சொந்த மைதானத்தில் விளையாடும் ரோகித், அதிரடி விளாசலில் ஈடுபடலாம். கேப்டன் கோஹ்லி, லோகேஷ் ராகுல், இளம் ஆட்டக்காரர் ஷிவம் துபே போன்றோரும் அதிரடி காட்டும் பட்சத்தில் இந்தியா தொடரை வெல்ல வாய்ப்புள்ளது.மே.இ.தீவுகள் வீரர்களும் நல்ல பார்மில் உள்ளதால் இன்றைய போட்டியில் இரு அணிகளுமே கடும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.





