“உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை” – கமல் திடீர் அறிவிப்பு!! திமுக, அதிமுக மீதும் மறைமுக தாக்கு!!
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை என அக்கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.இ கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை என்று, ஆளும் அதிமுகவையும், எதிர்க் கட்சியான திமுகவையும் மறைமுகமாக கமல் சாடியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 27, 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, நாளை வேட்பு மனுத்தாக்கலும் தொடங்க உள்ளது. இந்தத் தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கமலுக்கு , சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆதரவளிக்கலாம் என்று கூட எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இன்று காலை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை. ரஜினி பெயரையோ, படத்தையோ, ரஜினி மக்கள் மன்றத்தின் கொடியையோ யாரும் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தவும் கூடாது என எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், இரு கட்சிகள் (அதிமுக, திமுக) எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை என்றும் கூறி கமல் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்றால் கிடைக்கக்கூடிய முன்னேற்றம் சொற்பமானதே என்றும், இந்தத் தேர்தலும் மக்கள் நலனுக்காக இருக்கப் போவது அல்ல என்றும், 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நம் இலட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நம் இலட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்”என்றும் கமலஹாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





