தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
பின்னர் சிறிது இடைவெளிவிட்டு கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது தென் தமிழகம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.





