--- --:--:-- --

ரூ.1000 ரொக்கம், பொங்கல் பரிசு எப்போ..?படையெடுக்கும் மக்கள்..!ரேசன் ஊழியர்கள் பாடு படு திண்டாட்டம்..!

egs

தைப் பொங்கல் பரிசாக ஒன்றரை மாதம் முன்பே ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைத்த நிலையில், அனைவருக்கும் கிடைப்பது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை இனிமேல் தான் கொள்முதலே செய்ய முடிவு செய்துள்ள நிலையில், இப்போதே மக்கள் ரேசன் கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளதால், பதிலளிக்க முடியாமல் ஊழியர்கள் பாடு படுதிண்டாட்டமாகி உள்ளது.

 

கடந்த ஆண்டு பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு தான் ரூ. 1000 ஆயிரம் ரொக்கத்துடன், அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலம், உலர் திராட்சை, 2 அடி கரும்புத் துண்டு அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.கடந்தாண்டு வழங்கியது போன்றே வரும் பொங்கலுக்கும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டார்.

 

இதற்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தல் தான். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே இந்தப் பொங்கல் பரிசை மக்களிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்று அவசரமாக அறிவித்து, கடந்த வாரம் திட்டத்தையும் ஜரூராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனால் ரூ 1000 பணம் இப்போதே அனைவருக்கும் கிடைக்கப் போகிறது என ரேசன் கார்டுதாரர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியது. பலரும் உள்ளூர் ரேசன் கடைகளுக்கு, கார்டுகளுடன் படையெடுத்து, பரிசுத் தொகுப்பை கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்.

 

ஆனால், தலைமைச் செயலகத்தில், பெயரளவுக்கு 8 குடும்பத்தினருக்கு மட்டுமே இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதுடன், மாநிலம் முழுவதும் வழங்குவது எப்படி என்ற குழப்பம் அரசு அதிகாரிகளிடையே இன்னும் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் இந்த முறை 2.05 கோடி கார்டுதாரர்களுக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரூ 1000 வழங்க, தமிழக அரசு நிதி ஒதுக்கி விட்டதால் பணத்திற்கு பிரச்னையில்லைதான். அதே போல் அரிசி, சர்க்கரையையும் நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கி விடும்.

ஆனால், கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை கொள்முதல் செய்வதில் தான் குளறுபடி எனக் கூறப்படுகிறது. கரும்பை, கடந்தாண்டுகள் போல் ரேசன் கடைகளை நடத்தும் அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், விளைந்த கரும்பு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளதாம். அதே போல் முந்திரி, ஏலம், உலர் திராட்சையை கொள்முதல் செய்ய, இதற்கு முன் மொத்தமாக டெண்டர் விடப்பட்டு வாங்கப்பட்டது.

 

ஆனால் இப்போது டெண்டர் விட அவகாசம் இல்லாததால், ரூ 40 மதிப்புக்கு அந்தந்த கூட்டுறவு சங்கங்களே கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று நேற்று தான் முடிவு செய்யப்பட்டு உத்தரவு பறந்துள்ளதாம். அதுவும் இந்தப் பொருட்களை ஒரு வாரத்தில் கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்ள மட்டுமே உத்தரவாம். ஏனெனில், ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாமா?கூடாதா? என்ற குழப்பமும் இப்போது ஏற்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசே அறிவித்துவிட்டது… எப்போ கிடைக்கும்.. என பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு படையெடுத்து நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். ஊழியர்களோ என்ன பதிலளிப்பது என தெரியாமல் திண்டாடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தியும் ஒரு தீர்வும் கிடைக்காத விரக்தியிலும், அரசு மீது கோபத்திலும் ரேசன் ஊழியர்கள் உள்ளனர். இதனால் சில ஊழியர்களோ, தங்கள் உயர் அதிகாரிகளின் செல்போன் எண்களை, பொதுமக்களிடம் கொடுத்து நீங்களே கேளுங்கள் என அதிகாரிகளை மாட்டி விடும் வேடிக்கையும் நடக்கிறதாம்.

 

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் இத்தனை குளறுபடிகள் நிலவுகிறது. இப்போது உள்ளாட்சித் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால், பொங்கல் பரிசுத் தொகுப்பு தேர்தலுக்கு முன்னர் கிடைப்பது சந்தேகம் எனவே தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon