--- --:--:-- --

2021 தேர்தலில் அதிசயம், அற்புதத்தை மக்கள் நிகழ்த்துவது 100% உறுதி..! மீண்டும் அடித்துச் சொல்லும் ரஜினி

fgd

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக அரசியலில் அதிசயம், அற்புதத்தை தமிழக மக்கள் நிகழ்த்தப் போவது 100 சதவீதம் உண்மை என நடிகர் ரஜினிகாந்த் உறுதி படத் தெரிவித்துள்ளார்.

 

தமிழக அரசியல் களம் மீண்டும் ரஜினியை மையமாக வைத்து சுற்றிச் சுழன்றடிக்க ஆரம்பித்துள்ளது. கமல் 60 விழாவில், அவர் பேசிய அதிசயம், அற்புதம் என்ற வார்த்தைகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளன. தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் கமலுடன் இணையவும் தயார் என்றும் ரஜினி கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலும் இதே கருத்தைத்தான் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி என்ற சிறப்பு விருதைப் பெற்ற ரஜினி இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, இந்த சிறப்பு விருது கிடைக்க காரணம் தமிழக மக்கள் தான். தமிழக மக்களுக்கே இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார்.

 

தொடர்ந்து, கமலுடன் இணைந்தால், யார் முதல்வர் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதெல்லாம் தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு . கட்சி ஆரம்பித்து என் கட்சிக்காரர்களிடம் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும். தேர்தல் வரட்டும் . கூட்டணி குறித்தும், முதல்வர் குறித்தும் அப்போது எடுக்கப்படும் என்றார் ரஜினி.

தொடர்ந்து பேசிய ரஜினி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அரசியலில் அதிசயம், அற்புதத்தை நிகழ்த்தப் போகிறார்கள். இது 100 சதவீதம் உண்மை எனக் கூறிய ரஜினி, பெரிய கும்பிடு போட்டுவிட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார்.

 

இதனால், ரஜினியின் அடுத்தடுத்த பேச்சுக்களை பார்க்கும்போது, விரைவில் கட்சியைத் தொடங்க ஆயத்தமாகிவிட்டார் என்பதும், 2 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியபடி 2021 சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கவும் தயாராகி விட்டார் என்றும் தெரிகிறது. எனவே ரஜினி கூறியபடி 2021 தேர்தலில் என்ன மாதிரியான அதிசயம், அற்புதம் நிகழும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon