--- --:--:-- --

“இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி” – ‘பிங்க்’ நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன்..!!

89041461-6f77-4084-8308-de511c8cf2c0

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பங்கேற்கும் முதல் பகலிரவு போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.வங்கதேச அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளதால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமே பிங்க் நிறத்தில் ஜொலிக்கிறது.

 

கிரிக்கெட் போட்டிகள் முதலில் 5 நாட்கள் விளையாடும் டெஸ்ட் போட்டியாகவே அறிமுகமானது. 5 நாள் டெஸ்ட் போட்டிக்கு மவுசு குறைய, காலப்போக்கில் கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகமாகின. 1975-ல் ஒரு நாள் போட்டியும், தொடர்ந்து 20 ஓவர் கொண்ட டி20 போட்டியும் அறிமுகமாகி இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.

 

முதலில் பகல் நேரத்திலேயே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு நாள் , மற்றும் டி20 போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடத்தப்பட ஆரம்பித்தன. இதையடுத்து டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவு ஆட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2015-ல் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் முதல் பகலிரவு போட்டி நடைபெற்றது ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பங்கேற்ற இந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் வெற்றியை ருசித்தது. 2015 முதல் இதுவரை 11 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருந்தாலும், இந்தியா இதுவரை ஒரு போட்டியில் கூட பங்கேற்றதில்லை.அது போல் இந்தியாவிலும் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவரை நடத்தப்பட்டதில்லை.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி பொறுப்பேற்றவுடன், பகலிரவு போட்டியை நடத்தும் முடிவுக்கு வந்தார். வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்துவது பற்றிய தனது எண்ணத்தை கேப்டன் கோஹ்லியிடம் கங்குலி கடந்த மாதம் கூற, சற்றும் யோசிக்காமல் மூன்றே நிமிடத்தில் அதற்கு ஓகே சொல்லிவிட்டார் கோஹ்லி.

 

அதன்படி நாளை தொடங்க உள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான ஆயத்தப் பணிகள், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விறுவிறுப்படைந்தன. இந்தப் போட்டியில், முதல் முறையாக பிங்க் நிறத்திலான பந்து பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் ஈடன் கார்டன் மைதானமும் எங்கு பார்த்தாலும் பிங்க் நிறத்தில் ஜொலிக்கிறது. மைதானத்தின் நடு மையமாக வானில், பிங்க் நிறத்திலான பந்து வடிவம் கொண்ட ராட்சத பலூன் சில நாட்களாக பறக்க விடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமரும் இருக்கைகளும் பிங்க் நிறத்திற்கு மாறியுள்ளன. பிங்க் நிறத்திலான விளக்குகளும் ஜொலிக்கின்றன.

இது மட்டுமின்றி இந்தியா பங்கேற்கும் முதல் பகலிரவுப் போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்களும் மிக்க ஆர்வத்தில் உள்ளனர். இதனால் முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, தான் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த முதல் பகலிரவுப் போட்டியிலும் வெற்றி வாகை சூடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Leave a Reply

Right Menu Icon