--- --:--:-- --

தம்பி அதிபர்…! அண்ணன் பிரதமர் ..! இலங்கையில் இனி ராஜபக்சே குடும்பத்தின் ராஜ்ஜியம் தான்!!

ghjgf

பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்சேவை, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய தம்பி கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார். இதனால் தம்பி அதிபர், அண்ணன் பிரதமர் என இலங்கையின் ஆட்சி அதிகாரம் முழுவதும் ராஜபக்சே குடும்பத்தின் பிடிக்கு மீண்டும் சென்றுள்ளது.

 

கடந்த 2005 முதல் 10 ஆண்டுகள் இலங்கையின் அதிபராக கோலோச்சியவர் மகிந்த ராஜபக்சே .அப்போது அவருடைய தம்பியான கோத்தபய ராஜபக்சே ராணுவ அமைச்சர் பதவியில் இருந்தார். இந்தக் காலக்கட்டத்தில் தான், இலங்கையில் நடைபெற்று வந்த 37 ஆண்டு கால ஈழப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். 2009-ல் நடந்த புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில், ஈவு இரக்கமின்றி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்து, புலிகளை ஒழித்துவிட்டதாக கொக்கரித்தனர்.

 

ஆனாலும் 2015-ல் ராஜபக்சே குடும்பத்தின் பிடியிலிருந்து ஆட்சி அதிகாரம் பறிபோனது. அதிபராக மைத்ரிபால ஸ்ரீசேனாவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பொறுப்புக்கு வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற, இலங்கையில் மீண்டும் ராஜபக்சே குடும்பத்தின் ஆதிக்கம் தலைதூக்க தொடங்கி விட்டது. அதிபரான அடுத்த நிமிடமே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, ராஜபக்சே குடும்பத்தினர் நெருக்கடி தர ஆரம்பித்தனர். அதிபர் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது டிஸ்மிஸ் என்ற ரீதியில் ரணிலுக்கு நெருக்கடி முற்ற, பதவிக் காலம் முடியும் முன்னரே தமது பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

 

ரணில் ராஜினாமா செய்த அடுத்த சில மணி நேரத்தில், தமது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து உத்தரவு போட்டு விட்டார் அவரது தம்பியும், புதிய .அதிபருமான கோத்தபய ராஜபக்சே .இதனால் இன்று பிரதமர் பதவியேற்கும் ராஜபக்சே, புதிய அமைச்சர்களையும் நியமிக்க உள்ளார்.

 

இலங்கை நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது. ஆக, தம்பி அதிபர், அண்ணன் பிரதமர் என, இனி இலங்கையின் ஆட்சி அதிகாரம் முழுக்க ராஜபக்சே குடும்பத்தின் ராஜ்ஜியம் தான்.இதில் ராஜபக்சேவின் மற்றொரு சகோதரர் சமல் ராஜபக்சே, மகன் நமல் ராஜபக்சே ஆகியோருக்கும் விரைவில் முக்கியப் பதவிகள் வழங்கப்பட உள்ளது என்பதும் கூடுதல் தகவல்.

Leave a Reply

Right Menu Icon