கவுன்சிலர்களுக்கு ஜாக்பாட்…! மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் எப்படி…?
தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளின், மக்கள் பிரதிநிதி தலைமைப் பொறுப்பு வகிப்பவர் மேயர் என்று அழைக்கப்படுவார். அதுபோல் 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளின் தலைமைப் பொறுப்புக்கு வருபவர் நகராட்சி தலைவர் பேரூராட்சி தலைவர் என்றே அழைக்கப்படுவார்கள். இது போக ஊராட்சித் தலைவர்கள் , ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் , மாவட்ட ஊராட்சி தலைவர்கள் பதவிகளும் உண்டு.
நமது நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்பது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த 1985 – 89 காலக்கட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இதன்படி உள்ளாட்சித் தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்தியே தீர வேண்டும். அப்பொழுதுதான் மத்திய அரசின் நிதி கிடைக்கும் என்று சட்டமே இயற்றப்பட்டது.
இதனால் தமிழகத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி முதன் முதலில் 1996-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பின்னர் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் அக்டோபர்,நவம்பர் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டன. இதில் ஊராட்சி , நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் இதுவரை மக்களால் நேரடியாகவே தேர்வு செய்யப்பட்டனர்.மாநகராட்சி மேயர் பதவிக்கும், 2006-ம் ஆண்டைத் தவிர மற்ற தேர்தல்களில் நேரடித் தேர்தல் தான் நடைபெற்றது. துணை மேயர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகள் மட்டுமே, பெரும்பான்மை கவுன்சிலர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

அதே வேளையில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை, கவுன்சிலர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் தேர்வு செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் இருந்து வந்த ஒன்று.
கடந்த 2016-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் என திடீரென அவசரச் சட்டம் கொண்டு வந்தார். ஆனால் அந்த முறை தேர்தல் நடைபெறவில்லை. இப்போது வரை 3 ஆண்டுகளாக இழுபறியாக உள்ளது.
இதற்கிடையில், கடந்த 2018 ஜனவரியில் தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் என்று ஜெயலலிதா கொண்டு வந்த அவசரச் சட்டத்தையே மாற்றியது.மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் என புதிய அவசரச் சட்டம் இயற்றியது. இதனால் தற்போது நடைபெறும் என எதிர்பார்க்கப் பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் கூட அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால் தமிழக அரசோ திடீரென மாநகராட்சி மேயர் பதவி மட்டுமின்றி எப்போதும் இல்லாத புதுமையாக நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளிலும் கை வைத்து, இந்தப் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளும் அதிமுக மற்றும் அதன் ஒரு சில சின்னஞ்சிறு கூட்டணிக் கட்சிகள் மட்டுமே ஆதரவான நிலைப்பாடு எடுத்துள்ளன. இந்த முடிவு அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கே பெரிய அதிர்ச்சியாகத்தான் அமைந்துள்ளன. ஏனெனில் அதிமுக கூட்டணியில் இந்தக் கட்சிகள், சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளைப் பெற பேரம் பேசி வந்தன. மறைமுகத் தேர்தல் என்றால், இந்தக் கட்சிகளால் ஒரு மேய ரோ அல்லது நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியைக் கூட கைப்பற்ற முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
இதே போல் எதிரணியில் உள்ள திமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்துமே மறைமுகத் தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புக்குக் காரணம், ஆளும் கட்சி அதிகார பலத்தைக் கொண்டு குதிரை பேரம் நடத்தி தங்கள் கட்சி கவுன்சிலர்களைக் கூட அணி மாறச் செய்து தலைவர் பதவிகளைக் கைப்பற்றி விடும் என்ற அச்சம் தான் . ஏனெனில், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அணி மாறினால் கட்சித் தாவல் சட்டம் பாய்ந்து பதவி போய்விடும். ஆனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி, மறைமுகத் தேர்தல் எப்படி நடைபெறும் எனப் பார்க்கலாம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த வார்டுகள் வாரியாக கவுன்சிலர் தேர்தல் மட்டுமே நடைபெற்று கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் பின்பு ஒரு வாரமோ இரண்டு வாரங்களோ இடைவெளியில், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மன்றமுகத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.
இந்த மறைமுகத் தேர்தலில் மெஜாரிட்டி கவுன்சிலர்கள் ஒட்டுப்போட்டால் மட்டுமே ஜெயிக்க முடியும். இதனால் ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி ஆதரவு இல்லாத பட்சத்தில் தான் குதிரை பேரம் மட்டுமின்றி, கவுன்சிலர்களை மிரட்டுவது, கடத்துவது, ஆதரவு கவுன்சிலர்களை கூவத்தூர் கதை போல மொத்தமாக ஓரிடத்தில் கொண்டு சேர்த்து தங்க வைப்பது போன்ற கூத்துகள் எல்லாம் அரங்கேறும். இதற்கு முன் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலிலும், ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல்களிலேயே இந்தக் கூத்துகள் அரங்கேறின. பல இடங்களில் பெரும் அடிதடி, கலாட்டாக்களாகி வன்முறை சம்பவங்கள் கூட நடந்து முடிந்த வரலாறும் உண்டு.
இந்த முறை கூடுதலாக மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுகத் தேர்தல் என்பதால், நேரடியாக மக்கள் அளிக்கும் வாக்கை விட, கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டு மேயர், தலைவர்களுக்கான தேர்தல் தான் பெரும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்பது உண்மைதான். அதிலும் கவுன்சிலர்களுக்குத்தான் பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது என்றே கூறலாம்.






