ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமின் மறுப்பு
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் தனித்தனியே வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் கடந்த ஆகஸ்டு 21இல், சி.பி.ஐ. அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதே நேரம், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவர், திகார் சிறையில் உள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில், ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என்று குறிப்பிட்டு, அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. சிதம்பரம் தரப்பில், அவரது உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற வாதத்தை ஏற்க, நீதிமன்றம் மறுத்துவிட்டது.





