மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில்நடை நாளை திறப்பு
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் இருந்து இயக்கபப்டும் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், கேரள மாநிலம் பதினம்திட்டா மாவட்டத்தில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மண்டல-மகரவிளக்கு பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. சபரிமலை கோவிலுக்கு தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி வழிபட்டு வருவது வழக்கம்.
இந்தாண்டுக்கான மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நாளை திறக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக, இம்முறை 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தமிழகத்தில் இருந்து செல்லும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்கியது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையிலிருந்து 55 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.
அதேபோல் திருச்சி, மதுரை, புதுச்சேரியில் இருந்து தலா 2 பேருந்துகள்; தென்காசியில் இருந்து 3 பேருந்துகள் தினமும் சபரிமலைக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை கூட்டப்படும் என்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.






