புதுச்சேரி மதுபானக் கடையில் திடீர் தீ விபத்து
புதுச்சேரி அண்ணா சாலையில் முனியாண்டி ஒயின்ஸ் என்ற தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. வழக்கம்போல் காலையில் மதுபான கடை திறக்கப்பட்டு மது குடிப்பவர்கள் உள்ளே மது அருந்து கொண்டிருந்தார்கள். மதுபான கடையில் இருந்த ஏ.சி-யிலிருந்து திடீரென ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மதுபான கடை முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.
மேலும் புகையானது ரெஸ்டாரண்ட் மற்றும் தங்கும் அறைகளுக்கு பரவியது. இதனால் கடும் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் அங்கிருந்து தண்ணியைக் கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் மதுபான கடை முழுவதும் தீ பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீ அணைக்கப்பட்டு இருந்தாலும் கடுமையான புகையின் காரணமாக உள்ளே யார் சிக்கிக் கொண்டனர் என தெரியவில்லை. இருப்பினும் மது குடித்த ஒரு சிலர் மது பாட்டிலுடன் வெளியே ஓடி வந்தனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கிக் கொண்ட சமையல் மாஸ்டர் மற்றும் இரண்டு ஊழியர்கள் மயக்க நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று அவர்களை தூக்கி வந்தனர். மயக்கமாக இருந்த அவர்களுக்கு சி.பி.ஆர் செய்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அண்ணா சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காட்சி அளித்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




