--- --:--:-- --

பெருவளை வாய்க்காலில் பாசன நீர் திறக்க கோரிக்கை!

7

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளை வாய்க்காலில் பாசன நீர் திறக்கக்கோரி கண்களில் துண்டு கட்டி கொண்டு நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகளால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், எல்.நெய்குப்பை மற்றும் புதூர், உத்தமனூர் கிராமங்களை சேர்ந்த பெருவளை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர், பாசனத்திற்காக வாய்க்காலில் நீர் திறக்கக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்களில் துண்டு கட்டிக்கொண்டு நூதன முறையில் மனு வழங்கினர்.

 

 

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் எல்.நெய்குப்பை மற்றும் புதூர் உத்தமனூர் கிராமங்களில், பெருவளை வாய்க்கால் பாசனத்தை நம்பி நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது 50 நாட்கள் ஆகின்றன.

 

 

இந்தநிலையில், இப்பகுதியில் உள்ள பயிர்களுக்கு தேவையான பாசன நீர் கிடைக்காததால், சுமார் 300 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி வாடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாசன நீர் கிடைக்காத பட்சத்தில், விதை, உரம், உழவு மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கான செலவுகளுக்காக ஏற்கனவே அதிக முதலீடு செய்த விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

இந்தநிலையில், பெருவளை வாய்க்காலில் உடனடியாகப் பாசன நீரைத் திறந்து விடவும், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து இப்பகுதிக்குத் தடையின்றி தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சியர் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பெருவளை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கண்களில் துண்டை கட்டிக்கொண்டு நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். விவசாயிகள் கண்களை கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon