--- --:--:-- --

ஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெறும் கைசிக ஏகாதசி விழா

6

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் கைசிக ஏகாதசி விழா இன்று (நவம்பர் 20) வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

 

இதையொட்டி, உற்சவர் நம்பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள், திருமஞ்சனம், அரையர் சேவை மற்றும் கைசிக புராணம் வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு வஸ்திர பகுமான மரியாதை சமர்ப்பிக்கப்பட்டது பக்தர்களிடையே சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

 

விழாவையொட்டி, இன்று காலை 10 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நம்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், மாலை 5.30 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் மூலஸ்தானத்தைச் சென்றடைகிறார். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் புறப்பாடாக இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்வார்.

 

 

அங்கு இரவு 9.30 மணி முதல் 11.30 மணி வரை 365 வஸ்திரங்கள், வேளையம் மற்றும் கற்பூர ஆரத்தி ஆகியவை அரையர் சேவையுடன் சமர்ப்பிக்கப்படும். இதையடுத்து, இரவு 11.30 மணி முதல் நாளை (நவம்பர் 21) அதிகாலை 2 மணி வரை பட்டர் சுவாமிகளால் கைசிக புராணம் வாசிக்கப்படும். கைசிக ஏகாதசியின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இந்தப் புராண வாசிப்பு, இறைவனிடம் பக்தியும் சரணாகதியும் எத்தகைய உயர்ந்த நிலையைப் பெறுகின்றன என்பதை எடுத்துரைக்கும் நிகழ்வாகும்.

 

 

இதற்கிடையே, கைசிக ஏகாதசி விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள் மற்றும் ரங்கநாயகி தாயார் ஆகியோருக்கு வஸ்திர பகுமான மரியாதை சமர்ப்பிக்கப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முடடாடா ரவிச்சந்திரன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பிரகாஷிடம் வஸ்திரங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் திருப்பதி தேவஸ்தான நகைப் பொறுப்பாளர் குருராஜகன், ஸ்ரீரங்கம் சுந்தர் பட்டர் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

தொடர்ந்து, நாளை அதிகாலை 5.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள், 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி, காலை 6 மணிக்கு மீண்டும் மூலஸ்தானத்தைச் சென்றடைவார். மேலும், விழா நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணிக்குப் பிறகு மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கான சேவை கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோயில் அலுவலர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர். கைசிக ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நம்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon