10 ஆண்டுகளில் காங்கிரஸ் ரூ. 12 லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டது – அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “காங்கிரஸுக்கு 10 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நீங்கள் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டீர்கள். ராகுல் காந்திக்கு அதிகாரம் தேவைப்பட்டால், வெளிநாட்டுப் பயணங்களை நிறுத்திவிட்டு, இந்தியாவின் கிராமங்களுக்குச் செல்லத் தொடங்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம், பூனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியை காங்கிரஸ் கட்சி பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், ஹைதராபாத்தில் ‘பாரத் உச்சி மாநாடு 2026’ (Bharat Summit 2026) என்ற நிகழ்வை அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இடதுசாரி சித்தாந்தத்தைப் பரப்புபவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்; காங்கிரஸ் கட்சியின் இளவரசரும் அங்கு சென்றிருந்தார். இதற்கு ‘பாரத் உச்சி மாநாடு’ என்று பெயரிடப்பட்டிருந்தாலும், ராகுல் காந்தி ஒரு சர்வதேச மாநாட்டில் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்து, உலக அரங்கில் இந்தியாவையே அவதூறு செய்யும் செயலில் ஈடுபட்டார்.
உங்களுக்கு 10 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்பட்டது; அந்த காலகட்டத்தில் நீங்கள் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டீர்கள். நாட்டு மக்கள் உங்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றி, நரேந்திர மோடியை பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர். கடந்த 12 ஆண்டுகளில், நரேந்திர மோடி மீது மிகச்சிறிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டு கூட சுமத்தப்படவில்லை.
இது போன்ற சர்வதேச மேடைகளில் இந்தியாவைப் பழிப்பதன் மூலம் உங்களுக்கு (ராகுல் காந்தி) அதிகாரம் கிடைக்காது. உங்களுக்கு அதிகாரம் தேவைப்பட்டால், வெளிநாட்டுப் பயணங்களை நிறுத்திவிட்டு, இந்தியாவின் கிராமங்களுக்குச் செல்லத் தொடங்குங்கள். அப்போது ஒருவேளை, என்றாவது ஒருநாள் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்” இவ்வாறு பேசியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





