உ.பி.-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்கள் நீக்கம்!
உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது 1.27 கோடி இந்து வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், இஸ்லாமிய வாக்காளர்களின் எண்ணிக்கை 1.65% அதிகரித்துள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் ஆளும் பாஜகவிற்குள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் (SSR) போது விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபடுமாறு தனது கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அறிய வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் 403 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1.27 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 31,000-க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளனர்.
இதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000 முதல் 25,000 வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாவட்டத் தலைவர்களுக்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 50 வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர் (SSR) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி மூன்று நாட்கள் கழித்து, வரும் நவம்பர் 20-ஆம் தேதி இந்த சிறப்பு இயக்கம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோவில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் இந்த இலக்குகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் மாநில பாஜக தலைவர் பங்கஜ் சௌத்ரி ஆகியோர் உரையாற்றினர்.
அடுத்த ஒரு மாதத்திற்கு வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் பணியில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “நம்மால் 40 லட்சம் முதல் 80 லட்சம் வாக்காளர்களைக் கூட மீண்டும் சேர்க்க முடிந்தால் அதுவே போதுமானதாக இருக்கும்” என்றார்.
அடுத்த ஒரு மாத காலத்தை தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான ‘இறுதி வாய்ப்பு’ என்று வர்ணித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இந்த சிறப்பு சுருக்கத் திருத்தத்திற்குப் பிறகு வாக்காளர் பட்டியலின் வரைவு நவம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளைத் தெரிவிக்கும் காலம் டிசம்பர் 16 வரை இருக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியலுடன், பஞ்சாயத்து தேர்தல் வாக்காளர் பட்டியல்களையும், அரசு நலத்திட்டப் பயனாளிகளின் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்து, விடுபட்டவர்களைக் கண்டறியுமாறு” முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.சட்டமன்றத் தேர்தலுக்கான பட்டியலை தேர்தல் ஆணையம் (EC) தயாரிக்கும் நிலையில், பஞ்சாயத்து தேர்தல்களுக்கான பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது.
2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பல தொகுதிகளில் 1,500 முதல் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து 5,000 முதல் 10,000 வாக்காளர்கள் வரை குறைந்தால், அது தேர்தல் முடிவுகளை மாற்றிவிடும் என்று கட்சித் தலைமை அஞ்சுகிறது.2017 தேர்தலில் பாஜகவிற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் (SP) இடையேயான வாக்கு வித்தியாசம் 1.55 கோடியாக இருந்தது. ஆனால் 2022-ல் இது 85 லட்சமாகக் குறைந்துவிட்டது. எனவே முதல்வர் சுட்டிக்காட்டியுள்ள இந்த வாக்காளர் எண்ணிக்கை கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
மாநிலத்தில் உள்ள வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் அல்லது வேறு மாநிலத்திற்குச் சென்ற வாக்காளர்கள் மீது கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் அதிகளவில் பெண்களையும் இளைஞர்களையும் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“எஸ்.ஐ.ஆர்-ன் போது, கணிசமான எண்ணிக்கையிலான நகர்ப்புற வாக்காளர்கள் தங்களது கிராமப்புற முகவரிகளுக்கு வாக்காளர்களை மாற்றிக் கொண்டனர். இது பாரம்பரியமாக பலம் வாய்ந்ததாக விளங்கும் நகர்ப்புறங்களில் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அத்தகைய வாக்காளர்களிடம் பேசி, மீண்டும் நகர்ப்புறத் தொகுதிகளுக்கே தங்களது வாக்குகளை மாற்ற படிவங்களை நிரப்ப உதவுவோம். அதேபோல், வேறு மாநிலங்களுக்குச் சென்று அங்கே வாக்காளர்களாகப் பதிவு செய்துகொண்டவர்களிடம் தங்கள் வாக்குகளை மீண்டும் உ.பி.க்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படும்” என்று பாஜக நிர்வாகி ஒருவர் கூறினார்.
“தற்போதைய வாக்காளர் பட்டியலில் பாலின விகிதம் 834 ஆக உள்ளது. எஸ்.ஐ.ஆர்-ன் போது பல்வேறு காரணங்களால் பல பெண்கள் விடுபட்டுள்ளனர் அல்லது அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி மதிப்பிடுகிறது. அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், அவர்களைப் பதிவு செய்ய கட்சி உதவும். கட்சி எப்போதுமே வெற்றி பெறாத முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தாது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




