விசிக மீது திமுக வன்மத்தோடு செயல்படுகிறது – அமைச்சர் வன்னி அரசு
விசிக தலைவர் திருமாவளவனும் தானும் திமுகவை நேசிக்கிறோம் ஆனால் திமுக எங்கள் கட்சி மீது வன்மத்தோடு செயல்படுகிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.சென்னையில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் முதலமைச்சர் அவர்கள் உத்தரவுபடி கேக் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் என்ற முறையில் தான் குழந்தைகளுக்கான வாழ்த்து அட்டையில் விஜயின் படம் இடம் பெற்றது என்று தெரிவித்தார். மேலும் செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை சுணக்கம் ஏற்பட வில்லை. தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்க்கும் என பாஜகவினர் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் பதில் அளித்தார்.
திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது வன்மத்தோடு செயல்படுகிறது என்றும் அமைச்சர் வன்னி அரசு குற்றம்சாட்டினார். நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் திமுகவை நேசிக்கிறோம். நாங்கள் அவர்களுக்கு பதில் சொல்வதால் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களை இப்போதும் நேசிக்கிறோம். திமுக எங்கள் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உரிமைத் திட்டத்தில் அவர்கள் அளித்த அறிக்கையே சான்று என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி தொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது? இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
திராவிட மாடல் அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே! என்று தெரிவித்திருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





