ஜெம் வீரமணி போக்சோ வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் பெயர் சேர்ப்பு!
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு மீதான குற்றப்பத்திரிகையில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்குகளில், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தனது பெயரை சேர்க்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு 70 கோடி ரூபாய் வரை வீரமணி லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின், போலீஸ் அகாடமி இயக்குநரான முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண், கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வீரமணி வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு வீரமணியின் முதல் வழக்கில் 720 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், வீரமணி வழக்கை முறையாக கையாளவில்லை என காவல் அதிகாரி அருண் உள்ளிட்ட 7 அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




