விஜய் அறிவித்தபடி பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.44 கொள்முதல் விலை கிடைக்கவில்லை ஏன்?
அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைப் பராமரித்து, மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பால் உற்பத்தி செய்து வழங்கும் பால்காரர்களின் வாழ்வாதாரம் இன்றைக்குப் பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு மற்றும் புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை மளமளவென உயர்ந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்தி அறிவித்தார்.
இருப்பினும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான தொடக்கக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த ரூ.44 முழுமையாகக் கிடைப்பதில்லை என்ற வேதனைக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியின் கள நிலவரம், பால்காரர்களின் குற்றச்சாட்டுகள், துறை சார்ந்த அதிகாரிகளின் விளக்கம் மற்றும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சரின் கருத்துக்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 19-ம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், “தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3,16,000 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது 4.3% கொழுப்புச் சத்து மற்றும் 8.2% இதர சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்கத்தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய் 5-11-2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளை சுத்தம் செய்து, பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலை ஆட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை.உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது. கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில், நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3,16,000-த்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டிற்கு 360 கோடியும் செலவாகும்.” என்று அறிவித்தார்.
முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் இந்த அறிவிப்பு பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அரசுக்கு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிருப்தியும் எதிர்ப்பும் தான் வந்தது. ஏனென்றால், புண்ணாக்கு, பொட்டு, தவிடு, தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் பல மடங்கு உயர்ந்துவிட்டதால், பால் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், ஒரு லிட்டருக்கு வெறும் 3 ரூபாய் மட்டும் கொள்முதல் விலை உயர்த்துவதா என்று கேள்வி எழுப்பி, பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
.
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 31-ம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், “19.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தோம். இந்தச் சூழ்நிலையில், கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை ஆகியவை மிகவும் உயர்ந்துள்ளதைத் தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்று பல்வேறு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள், நலச் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலனை செய்து நமது அரசு, பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மேலும் 3 ரூபாய் உயர்த்தி 44 ரூபாயாக வழங்கவும் தற்போது அரசு முடிவு செய்துள்ளது.
நமது அரசு பால் உற்பத்தியாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும், பால் கொள்முதல் விலை உயர்வினால் ஏற்படும் செலவினத்தை, ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஈடுசெய்து வழங்கும். இந்தக் கொள்முதல் விலை உயர்வால், கூடுதலாக மொத்தம் ஒரு மாதத்திற்கு ரூபாய் 60 கோடியும், ஒரு ஆண்டிற்கு 720 கோடியும் செலவாகும்.” என்று அறிவித்தார்.
முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் இந்த அறிவிப்பு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தாலும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 என்பதும் போதுமானது இல்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு உழைப்பு, தவிடு, பொட்டு, புண்ணாக்கு, தீவனம் ஆகிய இடுபொருட்களின் விலை அதிகமாக உள்ளது என்பதே பால் உற்பத்தியாளர்களின் கவலையாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




