--- --:--:-- --

4 நாட்கள் தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்து கட்டணம் கடும் உயர்வு!

6

ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்ட நிலையில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வார இறுதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறையை பயன்படுத்தி வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

கன்னியாகுமரி பயணம் செய்ய இன்றைய தினம் பேருந்து ஒன்றில் 1800 ரூபாய் என்றால் வார இறுதி தினமான 16ஆம் தேதி (வெள்ளி) பயணம் மேற்கொள்ள அதே பேருந்தில் 3,420 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதுவே, திருநெல்வேலிக்கு இன்று சென்னையிலிருந்து பயணம் செய்ய 1399 ரூபாய் கட்டணம் என்றால் அதே பேருந்தில் வரும் 16 ஆம் தேதி பயணம் செய்ய 3000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 

சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று பயணம் மேற்கொள்ள 1200 ரூபாய் கட்டணம் என்றால் 16 ஆம் தேதி பயணம் செய்ய அதே பேருந்தில் 2500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கோவைக்கு இன்று பேருந்து ஒன்றில் பயணம் செய்ய 1800 ரூபாய் கட்டணமும், அதே பேருந்தில் 16 ஆம் தேதி பயணம் செய்தால் 3500 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

தனியார் செயலியில் ஆயுத பூஜை பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்கு 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்தக் கட்டணங்கள் அனைத்தும் தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள், சம்பந்தப்பட்ட ஊர்கள் வரை மட்டுமே நேரடியாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளாகும்.

 

 

அண்டை மாநிலங்கள் வரை செல்லும் பேருந்துகளில் பயண கட்டணமோ மேலும் 500 முதல் 1000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை கால விடுமுறை என்றாலே ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் மற்றும் செயலிகள் தன்னிச்சையாக உயர்த்துவதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற Toll free Number மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க பயணிகளுக்கு போக்குவரத்து துறை அழைப்பு விடுத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon