மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
மெட்ரோ ரயில் சென்னையின் முக்கியப் போக்குவரத்து நாடியாக விளங்குகிறது. இன்றைய சூழலில் மாணவர்கள் முதல் பொதுமக்கள் பலரும் மெட்ரோ ரயிலை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையில் இன்று மஞ்சள் வழித்தடத்தில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சென்னை மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த வழித்தடத்தில் உள்ள மெட்ரோ நிலையங்களில் காகித க்யூஆர் டிக்கெட்டுகளை வாங்க முடியாது.
பயணிகள் சி.எம்.ஆர்.எல் (CMRL) மொபைல் செயலி, என்.சி.எம்.சி (NCMC) கார்டுகள் மற்றும் பிற டிஜிட்டல் முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) வருத்தம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட மற்றொரு பதிவில், “சென்னை மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது. மஞ்சள் வழித்தடத்தில் காகித க்யூ.ஆர் டிக்கெட் வழங்கும் வசதிகள் இப்போது வழக்கம்போலச் செயல்பட்டு வருகின்றன.
உதவிக்கு, பயணிகள் எங்களது உதவி எண்ணான 1860 425 1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் பயணம் எங்களுக்கு முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





