--- --:--:-- --

தவெக அரசில் பாமகவுக்கு அமைச்சர் பதவி? – அன்புமணி ராமதாஸ்

3

தவெக அரசில் அமைச்சர் பதவி வழங்கும்படி, பாமக கோரிக்கை விடுக்கவில்லை என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக நீடிப்பதாகவும் விளக்கமளித்தார். தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறுவதாக வலைதளங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், “அவை எல்லாம் வதந்திகள் தான்.

 

 

நாங்கள் அமைச்சர் பதவி வேண்டும் என கேட்கவில்லை; கேட்கப்போவதும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக நீடிக்கிறது. இடைத்தேர்தலில் போட்டியில்லை என்கிற நிலைப்பாடு எடுத்தோம்.” என்று விளக்கம் கொடுத்தார்.

 

அதிமுக கட்சி தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதுதொடர்பாக பேசிய அன்புமணி, “இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. அதேவேளையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் ஐந்து மாதத்திற்கு முன் வெற்றிபெற்ற அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வெற்றிகளும் ஆளும் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். அதேவேளையில் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டை அதிகம் முறை ஆட்சி செய்த அதிமுக இந்த தோல்விக்கு பிறகு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நான் அவர்களை தவறாக சொல்லவில்லை. நல்ல எண்ணத்தோடு சொல்கிறேன். ஐந்து மாதத்திற்கு முன் வெற்றிபெற்ற கட்சி இன்று மூன்றாவது இடம். அதனால் நல்ல ஆலோசனையாக தான் சொல்கிறேன். தவறான எண்ணத்தில் சொல்லவில்லை. அதிமுக தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.” எனக் கூறினார். அதேபோல், இரண்டு தொகுதி இடைத்தேர்தல் பணம் கொடுக்காமல் ஜனநாயக ரீதியாக நடந்து முடிந்துள்ளதாகவும் அன்புமணி மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon