எ.வ.வேலு அவரது மகனுக்கு எதிரான வழக்கு!
தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அன்று திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மகன் எ.வ குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான திடலில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், 124 ஏக்கர் பரப்பளவு கொண்ட திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதில், “சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தும் பயனில்லை. இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதைக் கண்டு அதிகாரிகளிடம் உழவர் உரிமை இயக்கம் நவம்பர் 25 2005 இல் புகார் அளித்தது. ஆனால் ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போதைய அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக மண் திருடுவதற்கும் அவர்கள் சொத்து சேர்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது.
கலைஞர் திடல் நிலம் 124.56 ஏக்கர் நிலம், 12.06.2024 அன்று ரூ.46 கோடிக்கு ‘அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ (இயக்குனர்: எ.வ. குமரன்) என்ற நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலத்தை விற்பனை செய்த ‘ரிஷி என்டர்பிரைசஸ்’ நிறுவனம், நெடுஞ்சாலைத் துறையில் பல நூறு கோடி ஒப்பந்தங்களைப் பெற்று வரும் ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் நிறுவனமாகும். அந்த நிறுவனம் அவரது மனைவி பெயரில் உள்ளது. அவருடைய நிறுவனங்களில் சோதனையிட்ட வருமானவரித்துறை 2022-ல் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம்கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு சென்ட் நிலமே 1.5 முதல் 2 லட்சம் வரை விலை போகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க 124 ஏக்கர் நிலத்தை எப்படி வெறும் 46 கோடிக்கு நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தாரிடமே அப்போதைய நெடுஞ்சாலை துறை எவ வேலு மகன் 2024 இல் வாங்கினார் என்பது குறித்தும் பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், அறப்போர் இயக்கம் அளித்த இந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தரப்பில், இதற்கு முன்பும் அதே இடத்தில் மூன்று முறை மாநாடு நடத்தப்பட்டது. உரிய அனுமதி பெற்றே மணல் எடுக்கப்பட்டது. இந்த வழக்கு முழுக்க முழுக்க கற்பனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் அனுமதி பெறாமல், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், எதிர்தரப்பு வாதத்தைக் கேட்காமல், வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், இருவர் தரப்பிலும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என வாய்மொழியாக உத்தரவிட்டார். மேலும், முன்ஜாமீன் கோரிய மனுக்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





