--- --:--:-- --

பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்ற விஜய்!

7

சென்னை மாதவரம் அடுத்த பால்பண்ணை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சமீபகாலமாகச் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாகவும், பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்து தனியார் பால் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்வில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வக துணைக் கட்டிடத்தை விஜய் திறந்து வைத்தார். இந்திய தர நிர்ணய ஆணைய அமைப்பின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் மூலம் பால் மற்றும் பால் பொருட்களைத் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும்.

 

 

இதனைத் தொடர்ந்து, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் 7 ஏக்கர் பரப்பளவில், ரூ.152.26 கோடி செலவில் நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகர மக்களின் எதிர்கால பால் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

 

மாதவரம் ஆய்வை முடித்துவிட்டு, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு விஜய் வருகை தந்தார். வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து அவர் கையசைத்தவாறு சென்றார். பின்னர் பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்திற்குச் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

 

 

அங்கு வருகை தந்திருந்த ஏராளமான பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும், எம்.எல்.ஏ அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையம் மூலமாகச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்திருந்த பொதுமக்களுக்குப் பல்வேறு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

 

 

பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எந்தவித தாமதமின்றி உடனடியாகத் தகுந்த தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்புடன் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பது குறித்தும், வரவிருக்கும் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon