--- --:--:-- --

குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் தாய்மாமன் தடியடி திட்டமா?

2

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்களை கைது செய்ததற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

அந்தவகையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பணி நிரந்தரம் – சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த Dummy CM-ன் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர். ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது – மின்சாரத்தை நிறுத்துவது – உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் – மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் – அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.

 

 

செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு. பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?

 

 

செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன். குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர், தாய்மாமன் தடியடி திட்டமா? என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா என்று வினவியுள்ளார்.
அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம் என கண்டித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த பாசிச அக்கிரமத்தை முதலமைச்சர் எப்படி Justify செய்வார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

“மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் செவிலியர்கள், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஜனநாயக வழியில் போராடியுள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்தில் நம் உயிரை பெரிதும் பொருட்படுத்தாமல், மக்களின் உயிரை காப்பாற்றிய “Nightingale”. அவர்களுடைய கோரிக்கையை இந்த அரசு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டியது கடமை. பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர் பிரதிநிதிகளை மண்டபத்தில் அடைத்து வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

செவிலியர்களை குண்டு கட்டாக கைது செய்தது ஏற்கதக்கது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon