ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பதிவு!
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி, உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹான் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டு, மூவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தொழிலதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான போக்சோ உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
மேலும், ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கவும் காவல்துறை அழைப்பு விடுத்து, தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது. இந்த வழக்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமையைத் தாண்டி அரசியலாகவும் பெரும் விவாதமானது. அதுமட்டுமின்றி, அதிகார மட்டத்திலும் இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இந்த வழக்கு முதலில் பதிவு செய்யப்பட்ட காலத்தில் சென்னை மாநகராட்சியின் காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்., கூடுதல் ஆணையர் கண்ணன், விபசார தடுப்பு பிரிவின் முன்னாள் உதவி ஆணையரான கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின் ஆகிய மூவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி, அவரது கூட்டாளிகளான சாந்தி அவரின் கணவர் சிம்ஹான் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டு, அதன்படி அவர்கள் மூவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதியப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





