எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து!
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியதைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அக்டோபர் 19 ஆம் தேதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.
காவல்துறை அனுமதி மறுத்ததைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போராட்டத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை எனவும் ஜனநாயக ரீதியில் போராடுவோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்பதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




