எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு இன்றே கடைசி நாள்..!
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. பயோமெட்ரிக் பதிவு செய்யாவிட்டால் கேஸ் மானியம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் e-KYC-ஐ சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர்கள் வேறு வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்ததையடுத்து, இதனை தடுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது எல்பிஜி சிலிண்டரை வாங்கும் இண்டேன், பாரத் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் என அனைவருமே ஆதார் கார்டு அடிப்படையிலான முக அங்கீகார இ-கேஒய்சி அப்டேட் செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனத்தின் செயலி மற்றும் ஆதார் செயலி மூலமாக e-KYC-யை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு செப்டம்பர் 30 வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது. அவ்வாறு சமர்ப்பிக்காதவர்கள் அக்டோபர் 1 முதல் சந்தை விலையில் கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டியிருக்கும்.
அதாவது அவர்களுக்கு மத்திய அரசால் ஒரு சிலிண்டருக்கு வழங்கப்படுகிற ரூ. 210 மானியம் வழங்கப்படாது. அதேசமயம் அவர்களுக்கு கேஸ் இணைப்பு துண்டிக்கப்படாது. சிலிண்டர் தொடர்ந்து விநியோகிக்கப்படும். ஆனால் சந்தை விலை கொடுக்கவேண்டி இருக்கும். இந்த அறிவிப்பின்படி, இன்றே e-KYC சமர்ப்பிக்க கடைசி நாள். வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக மற்றும் பிற தொழில் சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை தடுப்பதும், போலி இணைப்புகளை ரத்து செய்வதுமே இதன் நோக்கம் என்று உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றுடன் கடைசி நாள் என்பதால் e-KYC சரிபார்ப்பை முடிக்காதவர்கள் விநியோக ஊழியரின் இயந்திரம் மூலமாகவோ, எரிவாயு முகமை அலுவலகத்திற்குச் சென்றோ, மொபைல் செயலில் மூலமாகவோ செய்துகொள்ளலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் ‘IndianOil One’, பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள், ‘IndianOil One’, ஹெச்.பி கேஸ் வாடிக்கையாளார்கள் ‘HP Pay’ ஆகிய அதிகாரப்பூர்வ செயலிகளின் மூலம் இந்த சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




