--- --:--:-- --

அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் ராஜராஜன் படுகொலை..!

01

திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாசலத்திற்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவிக்கு ராஜபாண்டி என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதேபோல், இரண்டாம் மனைவிக்கு ராஜராஜன் உள்ளிட்ட இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

இந்நிலையில், ராஜபாண்டியனுக்கும், ராஜராஜனுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்துவந்தது. குறிப்பாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ராஜராஜனுக்கு ஒரு வீடு சொத்து பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில், இருவருக்கும் இடையே தகராறு மேலும் வலுத்துள்ளது. இந்தச் சொத்து தொடர்பான விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜராஜனுக்கே அந்த வீடு என தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் சாவி ராஜராஜனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

 

இதனைத் தொடர்ந்து வீட்டை சுத்தம் செய்ய ராஜராஜன் இன்று அங்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்குவந்த ராஜபாண்டியன், ராஜராஜனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்தத் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜபாண்டியன் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ராஜராஜனை குத்த வந்துள்ளார். அதில் இருந்து தப்பித்து ராஜராஜன் ஓடியபோதும், அவரைவிடாமல், துரத்திய ராஜபாண்டியன், ஒரு கட்டத்தில் ராஜராஜனை கத்தியால் குத்தியும், சிலிண்டரை தூக்கி அவரது தலையில் போட்டும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து ராஜராஜனின் உறவினர்கள், ராஜபாண்டியனை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், படுகொலை செய்யப்பட்ட ராஜராஜனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்தனர். அதேசமயம், சாலை மறியலில் ஈடுபட்ட ராஜராஜனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோகச் செய்தனர். தொடர்ந்து கொலை செய்த ராஜபாண்டியனை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon