--- --:--:-- --

சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேச்சால் சிரிப்பலை!

01

மிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சால் சிரிப்பலை எழுந்தது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை இன்று கூடியது. சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதிலை அத்துறையின் அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார். பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் நிலவி வரும் பாம்புக்கடி பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினர்.

 

இதற்கிடையே தான் எழுந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “கேள்வி நேரம் தொடங்கி 29 நிமிடங்களாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் பாம்புக்கடி குறித்து பேசி வருகிறார். பாம்புக்கடி இருக்கும் இடங்களில் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். எனவே, அந்த தொகுதிகளில் நாகதோஷம் கழிப்பதற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நகைச்சுவையாக பேசினார். அவரின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

 

 

ஓபிஎஸ்ஸுக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “அறிவியல் பூர்வமாக மட்டுமே இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். பில்லி சூனியம் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. இங்கு ஜலதோஷம் தான் அதிகமாக உள்ளது, பாம்புக்கடி தோஷம் இல்லை. தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை, விருப்பமும் இல்லை” என்றார்.

 

மீண்டும் எழுந்த ஓபிஎஸ், “அமைச்சர் விரும்பினால் தோஷம் கழிக்கும் நபர்களை அனுப்பி வைப்பேன்” என்று காமெடியாக கூறினார். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பெரியாரிய இயக்கம் பேசிய திமுக இன்று தோஷம் கழிப்பது பற்றி பேசுகிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள் அறிவியல் பூர்வமாக மட்டுமே நாங்கள் அணுகுவோம்.” என்றார்.

 

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து, “எங்கள் உறுப்பினர் ஜலதோஷம் பற்றி தான் பேசினார். எங்கள் உறுப்பினர் கே.என். நேருவுக்கு ஜலதோஷம். அவருக்கும் ஒரு தீர்வு காண வேண்டும்” என்றார். கடைசியாக எழுந்த ஓபிஎஸ், “பெரியார் எங்கள் இதயங்களில் இருக்கிறார். அதேபோல் ஆன்மிகமும் எங்கள் இதயங்களில் உள்ளது” என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு பதில் கொடுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon