அடுத்தடுத்து வெடித்து சிதறிய 20 சிலிண்டர்கள்..!
கோவை மாவட்டத்தில் வட இந்தியர்கள் அதிகம் வசித்து வரும் பகுதியான நவ இந்தியாவில் அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.கோவையில் உள்ள நவ இந்தியா பகுதியில் 40 தகர கொட்டைகளை அமைத்து வட இந்தியர்கள் தங்கி கட்டட பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை அங்கு தங்கியிருந்த ஊழியர்கள் அனைவரும் தாங்கள் வேலை செய்யும் கட்டடப் பணிக்கு கிளம்பி சென்றனர்.இதனைத் தொடர்ந்து அங்கு திடீரென ஒரு சிலிண்டர் வெடித்துள்ளது. அதில் இருந்து பரவிய தீ அடுத்தடுத்து 20 சிலிண்டர்களை வெடிக்க செய்துள்ளது. இந்த விபத்து ஏற்பட்டதும், அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்தத் தகவலை பெற்ற தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் 30 பேர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் வெடிக்காமல் இருந்த சிலிண்டர்களையும் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
20 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து ஏற்பட்ட பெரும் விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அதேசமயம், வட மாநில தொழிலாளர்களின் உடைமைகள் தீயில் கருகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




