அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 24ம் தேதி கூடுகிறது
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 24ம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கேட்டு பெற தேமுதிக முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரத்தில் உள்ள வெங்கடாச்சலம் திருமண மண்டபத்தில் வரும் 24 ஆம் தேதி காலை 10.30மணிக்கு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் மற்றும் தேமுதிக வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் மழைக்காலங்களில் சாலைகள் சேதம் அடைவதால் நிதி ஒதுக்கி தமிழக அரசு சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளும்கட்சி கூட்டணியுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் தேமுதிக மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் விஜயகாந்த் பரப்புரை மேற்கொள்வார் எனவும் இதற்கென பிரத்தியேக வாகனம் தயாராகி வருவதாகவும் பிரேமலதா குறிப்பிட்டார். மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது போன்று அல்லாமல் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை கேட்டு பெற்று கட்சியை வளர்ப்பதில் தேமுதிக வியூகம் வகுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




