--- --:--:-- --

திருப்பூரில் கொல்லைப்புறக் காசுக்கு விலைபோகும் சாமி தரிசனம்: பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் அரங்கேறும் அதிர்ச்சி அட்டூழியங்கள்!

xsgsg

டி பெருக்குத் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்களின் அலைமோதி வருகிறது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஸ்தலமான பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசித்து வருகின்றனர்.

 

ஆனால், தன் பக்தியுடன் நீண்ட வரிசையில் நின்று முறையாக சாமி கும்பிட துடிக்கும் சாமானியப் பெண்களின் உழைப்பையும், நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தும் வகையிலும், கோவில் நிர்வாகத்தின் வருவாயை அடித்துத் தின்பதற்காகவும் ஒரு சில கயவர்கள் அரங்கேற்றி வரும் அராஜகங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

 

வரிசையில் நிற்பவர்கள் ஏமாளிகளா? குறுக்குவழி விஐபி கலாச்சாரம்!

 

ஒருபுறம், ஏழை எளிய பக்தர்களும், பெண்களும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மணிக்கணக்கில் வரிசையில் நின்று தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், உள்ளூர்வாசி’ என்ற போர்வையில் வலம் வரும் சில காடையர்கள், பக்தர்களை மிரட்டிவிட்டு தங்களுக்குச் சாதகமான ஆட்களை மட்டும் தரிசனத்திற்கு வரும் வழியை மாற்றி, பக்தர்கள் வெளியேறும் வழியிலேயே (Exit) உள்ளே அழைத்துச் செல்கின்றனர்.

விதிமுறைகளின்படி, சிறப்பு தரிசனத்திற்காக நிர்ணயிக்கப்படும் ஐம்பது ரூபாய் கட்டணம் கூட முறையாகக் கோவிலின் உண்டியலுக்கோ அல்லது கணக்கிற்கோ செல்வதில்லை. இந்தத் தொகை முழுவதும் அந்த உள்ளூர் கிரிமினல்களின் சட்டைப் பைக்குள்ளேயே சுருட்டப்படுகிறது. இதன் மூலம் கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கும், பராமரிப்புக்கும் சேர வேண்டிய லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.

வெள்ளைச் சட்டை ரவுடியிசம்… பெண்களை மடிக்கும் அத்துமீறல்!

 

இந்தக் கொள்ளைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவது போல வலம் வரும் அந்த அடையாளம் தெரியாத வெள்ளைச் சட்டை அணிந்த நபர், கோவிலுக்குள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. வரிசையில் நிற்பவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும், அநாகரிகமான வார்த்தைகளால் திட்டுவதும், கோவிலுக்கு வரும் பெண்களை ஒருவித வக்கிரமான பார்வையோடு பார்ப்பதும் என அந்தப் புனிதத் தலத்தின் அமைதியைச் சீரழித்துக் கொண்டிருக்கிறான்.

இவர்களைத் தட்டிக்க கேட்க வேண்டிய பாதுகாப்பும் ஒழுங்கும் கேள்விக்குறியாகியுள்ளது. பொதுமக்களை மிரட்டும் இத்தகைய அரக்கர் கூட்டத்தை உடனடியாகக் கோவிலுக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

காவி உடைக்குப் பின்னால் நடக்கும் கள்ளக் கூட்டு!

 

இதைவிட உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், காவி  உடை அணிந்து கொண்டு பூசாரியாகச் செயல்படும் ஒரு கயவன்தான் இந்த மொத்த ஊழலுக்கும் உடந்தையாக இருக்கிறார்.

உள்ளூர்வாசிகள் அழைத்து வரும் முறையற்ற நபர்களிடம் தனியாகப் பேசி, பெருந்தொகையைக் கையேந்திக் கொண்டு, மூலவர் சன்னதியில் தீபாராதனை காட்டி விடுகிறார். முறைப்படி டிக்கெட் எடுக்காமல்,  நேரடியாக இந்த பூசாரிக்குத் தரப்படும் காணிக்கைப் பணம் அவரது சொந்த லாபத்திற்காகவே சுருட்டப்படுகிறது. உள்ளூர் கொள்ளைக் கூட்டமும், இந்த ஊழல் பூசாரியும் கூட்டு சேர்ந்து கொண்டு, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்தக் கோவிலை தங்களின் தனிப்பட்ட கள்ளச் சந்தையாக மாற்றியுள்ளார்கள்

அறநிலையத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை?

 

“தற்போது தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கோவில்களில் முறைகேடுகளைத் தடுத்து வருவதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், திருச்செந்தூர், பழனி போன்ற பெரிய தலங்களில் விழும் வெளிச்சம், இது போன்ற சிறு மற்றும் பிரசித்தி பெற்ற கிராமப்புறக் கோவில்களில் படுவதில்லை.

இங்குள்ள உள்ளூர்வாசி காடையர்கள் தங்களை நாட்டாமைகளாக நினைத்துக் கொண்டு, கட்டப்பஞ்சாயத்து செய்வதையும், பெண்களை அச்சுறுத்துவதையும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

 

 

கொண்டத்து காளியம்மன் கோவிலில் உள்ளூர் என்ற பெயரில் வலம் வரும் அந்த வெள்ளைச் சட்டைக்காரன் மற்றும் கள்ளக் கூட்டு சேர்ந்த பூசாரி மீது அறநிலையத்துறையினர் உடனடியாகக் கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் உள்ளேயும் வெளிப்பகுதிகளிலும் ரவுடித்தனம் செய்பவர்களைக் கண்டறிந்து நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும்.

 

பக்தர்களின் தரிசன முறைகளை முறைப்படுத்தி, கோவிலின் வருவாயை இடைத்தரகர்களிடம் இருந்து மீட்க வேண்டும். பக்தர்கள் நிம்மதியாகவும், அச்சமின்றியும் வந்து அம்மனைத் தரிசித்துச் செல்ல வேண்டிய புனித பூமியை, சில சில்லறை காசுக்காகச் சூறையாடும் இந்தக் கயவர் கூட்டத்தின் வேர்களை உடனடியாக அறுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒற்றைக் குரலாகவும் கொதிக்கும் கோபமாகவும் உள்ளது.

           – சஷ்டி மு.கண்ணதாசன்

Leave a Reply

Right Menu Icon