--- --:--:-- --

வயநாட்டில் மட்டும் மீண்டும் மீண்டும் நிலச்சரிவு ..!

02

கேரளாவின் வடகிழக்குப் பகுதியில், தக்காண பீடபூமியின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைப்பாங்கான பீடபூமிதான் வயநாடு மாவட்டம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 700 மீட்டர் முதல் 2,100 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ள இந்த பிராந்தியம், மூன்று மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் புவியியல் பகுதியில் உள்ளது.

 

இதன் கிழக்கே கர்நாடகாவின் மைசூர் மற்றும் குடகு மாவட்டங்களும், வடக்கே தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டமும், தெற்கு மற்றும் மேற்கே கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன. புவியியல் ஆய்வு மையம் வயநாட்டின் 50%-க்கும் மேற்பட்ட பகுதிகளை “நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகள்” என வகைப்படுத்தியுள்ளது.

 

கேரள வரலாற்றிலேயே மிகக் கொடூரமான நிலச்சரிவுகளில் ஒன்று 2024 ஆம் ஆண்டு நிகழ்ந்த முண்டக்கை மற்றும் சூரல்மலா நிலச்சரிவு. மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில் ஏற்பட்ட அதீத பெருமழை, பெரிய பாறைகளையும் டன் கணக்கிலான மண்ணையும் அடிவார கிராமங்களை நோக்கித் தள்ளிக்கொண்டு வந்தது. இந்த விபத்தில் 400-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இறந்து போயினர்.

 

நூற்றுக்கணக்கான வீடுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பள்ளிகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. 2024 பேரழிவிற்கு முன்னதாக வயநாட்டை உலுக்கிய மற்றொரு பெரிய இயற்கை சீற்றம் புத்துமலை நிலச்சரிவு. 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பெய்த தொடர் பெருமழையால், மலை குன்றின் ஒரு பகுதி அப்படியே சரிந்து கீழே இருந்த கிராமத்தின் மீது விழுந்தது. இக்கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

 

புத்துமலை என்ற கிராமமே கேரளாவின் வரைபடத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக மறைந்து போகும் அளவுக்கு இந்த நிலச்சரிவு தீவிரமாக இருந்தது. வயநாட்டின் அம்பலவயல் மற்றும் வைத்திரி பகுதிகளில் 1984 மற்றும் 1992 ஆண்டுகளிலும் நடுத்தர அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வயநாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் செங்குத்தான மலைச்சரிவுகளையும், குன்றுகளையும் கொண்டவை. இப்பகுதியில் உள்ள செம்மண் மற்றும் பருத்த சரளைமண் அடுக்குகள் அதிகப்படியான நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை.

 

தொடர் மழையின் போது, இந்த மண் அடிவாரப் பாறைகளில் இருந்து எளிதாக நழுவி விடுகிறது. இங்கு, பருவமழைக் காலங்களில் மிகக் குறுகிய காலத்தில் 30 சென்டி மீட்டருக்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகிறது. தொடர்ச்சியாகப் பெய்யும் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, மண்ணின் பிடிப்புத் தன்மை முற்றிலும் தளர்ந்து, திடீரென நிலச்சரிவாக உருவெடுக்கிறது.

Leave a Reply

Right Menu Icon