நீட் தேர்வு கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு..!
நீட் தேர்வு விண்ணப்பத் தொகையைத் திரும்பப் பெற தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் இன்றைக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு ஏற்கனவே செலுத்திய கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் மே 27 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து வங்கிக்கணக்கு தொடர்பான விவர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இதற்கிடையே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று வங்கி கணக்குகளை பதிவேற்றவும், திருத்தம் செய்வதற்கும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தங்களது வங்கி விவரங்களை சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் அதனை இன்றிரவு 11.50 மணிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு விவரங்களை சரியாக சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு, கட்டணத் தொகையை திரும்ப வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 8 லட்சத்து 29 ஆயிரத்து 510 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கு விவரங்களைச் புதுப்பித்துள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.





