மக்களைப் பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் : விஜய்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கப் பணிகளுக்காக வழங்கப்பட்ட காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்யக் கோரி, தமிழக காங்கிரஸ் கட்சி விடுத்த கோரிக்கைக்கு, தமிழக முதலமைச்சர் நேர்மறையான பதிலை அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கங்கள் அமைப்பதற்காக, கடந்த ஜூன் 10-ம் தேதி நில ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான கால அவகாசத்தை தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த அரசாணைக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் தலைமையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பட் மற்றும் பிரவீன் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து விரிவான மனு ஒன்றை அளித்தனர். அப்போது, ”இந்த சுரங்கத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள கடலோர கிராம மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஓராண்டு காலநீட்டிப்பு அரசாணையை உடனடியாக மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த விஜய், “மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உங்கள் கோரிக்கையின் மீது நிச்சயமாக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர், கனிமவளத்துறை அமைச்சருடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், விரைவில் இந்த அரசாணை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





