இணைப்பு விழாவில் இபிஎஸ் குறித்து விஜயபாஸ்கர் சொன்ன தகவல்!
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இதற்கான விழா மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “பழையன கழிதலும் புதியன புகுதல் என்பது இன்று மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. விராலிமலை மற்றும் புதுக்கோட்டை மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இங்கே தவெக பொதுச் செயலாளரிடம் கூறுவது, தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுக தலைமையிடம் தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம், செவிமடுக்கவில்லை. தேர்தலுக்கு பின்னும் வலியுறுத்தினோம். செவிமடுக்கவில்லை.
ஆனால் செவிமடுக்காத அந்த தனிப்பட்ட நபர் ஒருவர், இயற்கைக்கு முரணாக எம்ஜிஆர் தீய சக்தி என எந்த திமுகவை கூறினாரோ, அந்த தீய சக்தியோடு கூட்டணி வைத்து ஆட்சியமைக்க முயன்றதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அதனால் இயற்கையாக உணர்வுகளோடு எதிர்கொண்ட முதல் தேர்தலில் இந்தியாவை திரும்பி பார்க்கவைத்த மக்கள் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக குடும்பத்தில் இன்றைக்கு இணைந்திருக்கிறோம்.
இந்த இணைப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது. தவெக வேறு, தமிழக மக்கள் வேறு கிடையாது. இனி வரும் தேர்தல்களில் தவெக 100 சதவீதம் வெற்றிபெறும். இது டிரெய்லர் தான். தலைமை அனுமதி கொடுத்தால் டெல்டாவில் மெயின் பிக்சர் காண்பிப்போம். மாப்பிள்ளை பர்வேஷுக்கு அது தெரியும். எங்களை இணைத்துக் கொண்டதிற்கு முதலமைச்சர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோருக்கு நன்றி.” என்று பேசினார்.





