தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு..!
எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் இதுவரை 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். சட்டப் பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் கைதான 3 பேரை 15ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்பவர், தான் ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில், தொடர்பு கொள்வதாகவும் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஆதரவாக செயல்பட அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு சன்மானமாக 35 கோடி ரூபாய் தருவதாக திருநாவுக்கரசு ஆசை வார்த்தை கூறியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, கடந்த 29ஆம் தேதி, சென்னை காவல் ஆணையரிடம், தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரில் அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியில் செயல்பட்டதாக நரேஷ், தியாகராஜன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையே, கரூரில் கைதான கார்த்திக், நரேஷ் தனிப்படை போலீசார் நள்ளிரவில் சென்னை கொண்டு வந்தனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து 2 பேரிடமும் தனித்தனியாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்ன?.
அதில், “திருநாவுக்கரசு, IPDS எனும் பெயரில் சென்னையில் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டு என்னிடம் பேசினார். அவர் பேசுகையில் ஒரு நல்ல விஷயத்துக்காக தான் நான் கால் பண்றேன், உங்களை எனக்கு நல்லா தெரியும். ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்த நபர்கள் சொன்னதன் பேரில் நான் தங்களிடம் தொடர்பு கொள்கிறேன்” என இளையராஜா கூறியதாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் “சபாநாயகர் மீதான தீர்மானத்தின் போது நாங்கள் சொல்லுவது போல் நீங்கள் நடந்து கொண்டால் போதும் உங்களுக்கு 35 கோடி கிடைக்கும்” என்று திருநாவுக்கரசு பேரம் பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரத்தை விரும்பாத இளையராஜா, “விருப்பமில்லை இனிமேல் பேசாதீர்கள்” என்று கூறியதாகவும் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மீண்டும் திருநாவுக்கரசு, “35 கோடி தருகிறேன். நீங்க கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்க. உங்களால் இவ்வளவு பெரிய தொகை நினைத்து கூட பார்க்க முடியாது. சொல்வது போல் நடந்தால் தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது. இல்லையேல் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். நான் பேசியதை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் நீங்களும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் உயிரோடு இருக்க மாட்டீர்கள்” என்று மிரட்டியதாக முதல் தகவல் அறிக்கையில் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஊழல் தடுப்புச் சட்டம், மற்றும் கூட்டுச்சதி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





